பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் உரிமைகள் சலுகைகள் குழுவுக்கு முன்னர் முதலமைச்சரை நிறுத்த வேண்டும் எனக் கோரிய எதிர்த்தரப்புத் தலைவர் அஸ்ஹார் இப்ராஹிம் இப்போது அதே தடையை எதிர் நோக்கியுள்ளார்.
சட்டமன்றத்தின் கூட்ட நிகழ்வுக் குறிப்புக்களில் சேர்க்கப்பட்ட விவரம் ஒன்றில் ‘தில்லுமுல்லு’ செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக அவரை நிறுத்தி வைக்கவும் உரிமைகள் சலுகைகள் குழுவுக்கு முன்னர் அவரை நிறுத்தவும் வகை செய்யும் தீர்மானம் ஒன்று இன்று காலை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
அஸ்ஹார் அவையை அவமானப்படுத்தி விட்டதாகவும் சட்டமன்றத்துக்கு சபாநாயகருக்கும் அவமரியாதைக் கொண்டு வந்து விட்டதாகவும் நிரந்தர ஆணை 34(4), 34(9) ஆகியவற்றுக்கு இணங்க டிஏபி டத்தோ கிராமாட் உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ சமர்பித்த அந்தத் தீர்மானம் கூறியது.
அஸ்ஹாரும் 10 பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை அவையி காணப்படவில்லை.
சபாநாயகர் அப்துல் ஹலிம் ஹுசேன் அந்தத் தீர்மானத்தை வாசித்தார். அதற்கு இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த எல்லா பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.