“ஆயிரம் பள்ளிப் பிள்ளைகளின் கல்வி முக்கிய மென்று அவர்கள் (தேமு) கருதினால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலத்தைக் கொடுத்திருப்பார்கள்” என்கிறார் முன்னாள் துணை அமைச்சர் முருகையா. (காணொளி)
கடந்த வாரம் சிரம்பானில் உள்ள லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் செனட்டர் முருகையா தேசிய முன்னணி குறித்து பேசியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அந்த நிகழ்வில் முன்னாள் மேலவை உறுப்பினருமான முருகையா பேசியிருப்பது காணொளி காட்சி ஒன்றில் பதிவாகியுள்ளது. 15.09 நிமிடங்கள் கொண்ட அக் காணொளிக் காட்சி “மஇகாவினர் இந்த காணொளியை பார்க்க வேண்டும்” எனும் தலைப்பில் யூ டியூப்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், “பொதுத் தேர்தலின்போது, பெற்றோர்கள் என்ற வகையில் உங்களுக்கு என்ன வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்யுங்கள். தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள் என உங்களை நான் எப்படி கேட்க முடியும்? (நீங்களே) அரசாங்கத்தை முடிவு செய்யுங்கள். யாருக்கு வாக்களிப்பெதென்று” முருகையா ஆவேசமாக உண்மையை பேசியது வெளியாகியிருக்கிறது.
அந்நிகழ்வில் சிலர் மஇகாவையும் அரசாங்கத்தையும் தாக்கு தாக்கென தாக்கினார் என்றும் அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், நாங்கள் தேமுக்கு வாக்களிக்கப் போவதில்லையென்று சொன்னவுடன் எரிச்சலடைந்து பின்னர்தான் தாம் அவ்வாறு உண்மையை கூற முற்பட்டதாக விளக்கமளித்தார்.
தாம் இன்னும் மஇகா உறுப்பினராக இருப்பதாகவும் தேசிய முன்னணி மீதான ஆதரவை மீட்டுக்கொள்ள எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் முன்னாள் மமுகவின் இளைஞர் பிரிவுத் தலைவருமான முருகையா தெளிவுபடுத்தினார்.