நயாத்தி கடத்தப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

ஒரு டச்சு சிறுவனான நயாத்தி ஷாம்லின் முடலியார் ஏப்ரல் 27ம் தேதி கடத்தப்பட்டது தொடர்பில் போலீசார் மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று காலை வரை பேராக், செராஸ், சிலாங்கூர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கப்பட்டதாகப் போலீஸ் வட்டாரங்கள் கூறின.

“நயாத்தியின் தந்தை ஷாம் முடலியாரும் தாயார் ஜானிஸ் ஸ்மித்தும் கொடுத்த பிணைப்பணத்தில் ஒரு பகுதி என நம்பப்படும் 100,000 ரிங்கிட்டையும் போலீஸ் மீட்டுள்ளது,” என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கோலாலம்பூர் போலீசாருடன் இணைந்து புக்கிட் அமான் அந்த நால்வரையும் கைது செய்தது.

பிணைப்பணத்துக்காக நயாத்தியின் தந்தையுடன் பேசும் போது சந்தேகத்துக்குரிய நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் பல மடிக்கணினிகளையும் கைத் தொலைபேசிகளையும் போலீஸ் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

சந்தேகத்துக்குரிய நபர்களை அடையாளம் காண்பதற்கு 12 வயதான நயாத்தியின் உதவியை நாடுவதற்கு, விடுமுறையில் சென்றுள்ள நயாத்தியின் குடும்பம் திரும்புவதற்காக போலீஸ் காத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

நயாத்தி தமது வீட்டுக்கு அருகில் உள்ள மொண்ட் கியாரா அனைத்துலகப் பள்ளிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டான். அந்தச் சிறுவன் மே மாதம் 3ம் தேதி காலை மணி 7.55க்கு வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள சுங்கை பூலோ ஒய்வுத் தலத்தில் பத்திரமாக கண்டு பிடிக்கப்பட்டான்.

இன்னும் தலைநகரில் மறைந்திருப்பதாக நம்பப்படும் சந்தேகத்துக்குரிய இன்னொரு நபரையும் போலீசார் தேடி வருவதாக நம்பப்படுகிறது.

போலீஸ் வேவுத் தகவல்களின் அடிப்படையில் அந்த நபரை விரைவில் பிடித்து விடும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன

பெர்னாமா