பாகாங் பெர்க்காசா: நிக் அஜிஸ் இரண்டு கண்களையும் திறந்து பார்க்க வேண்டும்

பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பேரணி மீது விடுக்கப்பட்ட பாட்வா பிரகடனத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு முன்னர் அதனை முழுமையாகப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

அந்தப் பேரணிக்கு முன்னும் பின்பும் என்ன நடந்தது என்பதை தெளிவாகப் பார்ப்பதற்கு நிக் அஜிஸ் தமது இரண்டு கண்களையும் திறக்க வேண்டும் என அரசு சாரா அமைப்பான பெர்க்காசாவின் பாகாங் மாநிலத் தலைவரான டாக்டர் அப்துல் வாஹிட் அப்துல் மானாப் கூறினார்.

அந்தக் கூட்டம் அந்தப் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால் தேவையில்லாமல் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன என அவர் சொன்னார்.

“அந்தப் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளும் நிலக்குத்தி விட்டன. அந்தப் பகுதியில் குப்பை கூளங்கள் நிறைந்து விட்டன. அந்தப் பேரணி பற்றி கூறப்படும் தகவல்களும் தெளிவாக இல்லை,” என அவர் குவாந்தானில் நிருபர்களிடம் கூறினார்.

முஸ்லிம்கள் பேரணிகளில் பங்கு கொள்வதைத் தடை செய்யும் முன்னர் அந்தக் கூட்டத்தை இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய பாத்வா மன்றம் முழுமையாக கண்ணோட்டமிட்டது எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் சொன்னார்.

“நிக் அஜிஸ் அந்தக் கூட்டத்தை நடத்தியதற்கான காரணத்தை மட்டும் பார்க்கக் கூடாது, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்ட அந்தப் பேரணியின் முடிவையும் பார்க்க வேண்டும்.”

தேசிய பாத்வா மன்றம் குழப்பதை கூட்டத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம்கள் பங்கு கொள்ள தடை விதித்த போது ஒற்றைக் கண்ணோடு சூழ்நிலையைப் பார்த்ததாக தமது முகநூல் பக்கத்தின் வழி நிக் அஜிஸ் தெரிவித்துள்ளதாக நேற்று ஊடகத் தகவல்கள் கூறின.
 
நிக் அஜிஸ் தமது அறிக்கைகள் மூலம் பொது மக்களைக் குழப்புவதில் வல்லமை கொண்ட தனிநபர் என்றும் அப்துல் வாஹிட் கூறினார்.

பெர்னாமா

 

TAGS: