இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் இப்போது அம்னோ உறுப்பினர் அல்ல என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட அம்னோ கிளையில் நடத்தப்பட்ட சோதனைகள் தமது உறுப்பியம் காலாவதியாகி விட்டதைக் காட்டியதாக அப்துல் அஜிஸ் தம்மிடம் இன்று காலை தெரிவித்தார் என நஸ்ரி சொன்னார்.
“இது 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் அப்போது சூராவ் ஒன்றுக்கு அருகில் வசித்து வந்தார். அந்த சூராவ் உறுப்பினர்கள் அனைவரும் அம்னோ உறுப்பினர்கள். அவர்கள் அப்துல் அஜிஸ் உறுப்பினராக வேண்டும் என வற்புறுத்தினர்,” என நஸ்ரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
தொடக்க உறுப்பியக் கட்டணத்தை சூராப் மக்கள் செலுத்தியதாகவும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் தாம் கட்டணம் செலுத்தவே இல்லை என்றும் அதனால் தமது உறுப்பியம் காலாவதியாகி விட்டது என்றும் அஜிஸ் தம்மிடம் சொன்னதாகவும் நஸ்ரி குறிப்பிட்டார்.