இந்தியாவின் மிகப் பெரிய மோட்டார் கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுக்கி அதன் மனெசார் கார் உற்பத்தி தொழிற்சாலையை கதவடைப்பு செய்துள்ளது. இதன் விளைவாக ஆகஸ்ட் 29 லிருந்து 3,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல இயலாமல் இருக்கின்றனர்.
அத்தொழிற்சாலை ஊழியர்கள் புதிதாக அமைத்த மாருதி சுஸுக்கி ஊழியர்கள் சங்கம் (எம்எஸ்இயு) பதிவுக்காக செய்திருந்த மனுவை காங்கிரஸ் கட்சி ஆளும் ஹைரியனா மாநில அரசு நிராகரித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாருதி சுஸுக்கி கதவடைப்பு செய்தது. மனு நிராகரிக்கப்பட்டதற்கு அங்கு ஒரு தொழிற்சங்கம் ஏற்கனவே இருந்து வருகிறது என்பதாகும். ஆனால், அத்தொழிற்சங்கம், மாருதி கம்கார் சங்கம் (எம்யுகேயு), நிருவாகத்தினரால் உருவாக்கப்பட்ட மஞ்சள் தொழிற்சங்கமாகும் (yellow union).
மாநில அரசு நிறுவனத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்துள்ள வேளையில் நிறுவனத்திற்கு ஆதரவான எம்யுகேயு உறுப்பியத்திலிருந்து அனைத்துத் தொழிலாளர்களும் வெளியேறி விட்டனர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம்எஸ்இயு சட்டப்படி நியாயமானதல்ல, ஏனென்றால் அச்சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய அகில-இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) அமைப்புடன் இணைந்துள்ளது என்பது நிருவாகத்தின் நிலையாகும். மாநில அரசின் முடிவு இந்நிலையை ஆதரிக்கிறது.
கதவடைப்புச் செய்யப்படுவதற்கு முந்திய நாள் மாலையிலிருந்து அரசாங்க ஆதரவுடன் 500 போலீசார், கலகத்தடுப்பு போலீசார் உட்பட, தொழிற்சாலைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இது இரகசியமாகச் செய்யப்பட்டது. தொழிலாளர்களுக்குத் தெரிந்து விட்டால் கடந்த ஜூன் மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட்ட தீவிர உட்கார்ந்த- வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்குவர் என்ற அச்சம் இருந்தது.
மாருது சுஸுக்கு நிறுவனம் தற்போது தொழிலாளர்களைப் பழிவாங்கும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
-wsws

























