கடந்த மாதம் தேவான் ராக்யாட் கூட்டத்தின் கடைசி நாளன்று அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை அரசாங்கம் திடீரென மீட்டுக் கொண்டது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அந்த மசோதாவை மீட்டுக் கொண்டால் ,” எதுவும் நடக்கலாம். நாம் அப்போது அது குறித்து எதுவும் செய்ய முடியாமல் போகக் கூடும்,” என அவர் எச்சரித்தார்.
“அதனை வேறு வகையாகச் சொன்னால் ‘penipuan besar'( பெரிய அளவில் தேர்தல் மோசடி) நிகழும் சாத்தியம் உண்டு. அதனைத் தடுக்க எதுவும் செய்ய முடியாமல் போகலாம்.”
ஆனால் அவர் தாம் சொல்வதற்கான அர்த்தத்தை தெரிவிக்கவில்லை.
“அது வெறும் வதந்தி என்றும் அரசாங்கம் அதனை மீட்டுக் கொள்ளாது என்றும் நான் நம்புகிறேன்,” என்றார் மகாதீர்.
அந்த மசோதாவை மீட்டுக் கொள்ள அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்ட போது “தேர்தல் மோசடிகளை தான் சமாளிக்க முடியும் என அரசாங்கம் எண்ணக் கூடும்,” என அவர் சொன்னார்.
“ஆனால் நான் பிரதமராக இருந்தால் நான் வலுவாக இல்லாததால் எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அவ்வாறு செய்ய மாட்டேன்.”
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு நாட்டை வழி நடத்தியுள்ள அந்த முன்னாள் பிரதமர், பேராசிரியர் மிச்சல் சோஸ்டோவோஸ்கி வெளியிட்டுள்ள “மூன்றவது உலகப் போரை நோக்கி: அணு ஆயுதப் போர் அபாயங்கள்” ( ‘Towards a World War III Scenario: The Dangers of Nuclear War’) என்னும் புத்தக்கத்தை நேற்று அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
அரசாங்கம், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றுக்கு இடையில் நிகழ்ந்த 10 நிமிடக் கூட்டத்தின் போது தேர்தல் குற்றங்கள் திருத்த மசோதாவை மீட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டதாக நேற்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அறிவித்தார்.
“தேவான் நெகாராவில் நாளை அதற்கான தீர்மானத்தை நான் சமர்பிப்பேன்,” என அவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
ஆகவே நடப்பிலுள்ள தேர்தல் குற்றங்கள் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதே அதன் பொருள் ஆகும்.