தேர்தல் பார்வையாளர்களாக ‘கட்சிச் சார்பற்ற’ அரசு சாரா அமைப்புக்கள் தேவை

இசி என்ற தேர்தல் ஆணையத்தை குறை  கூறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காத  ‘கட்சிச் சார்பற்ற’ அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை  தேர்தல் பார்வையாளர்களாக அந்த ஆணையம் நியமிக்கும்.

தங்கள் நாடுகளில் தேர்தல் பார்வையாளர்களாக இசியை அழைத்துள்ள நாடுகளில் உள்ள தேர்தல் ஆணையங்களும் அனைத்துலகப் பார்வையாளர்களாக அழைக்கப்படும்.

அந்த நாடுகளில் இந்தோனிசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவையும் அடங்கும்.

கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் நண்பகல் விருந்து நிகழ்ச்சியின் போது பேசிய இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அந்த தகவல்களை  வெளியிட்டார்.

“அவை தேர்தலை புரிந்து கொண்டுள்ளன. அவை தெளிவான புரிந்துணர்வுடன் இங்கு வருகின்றன. அவை தங்கள் நாடுகளில் “தேர்தல் ஆட்கள்,” என்றார் அவர்.

அண்மையில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைத்த அறுவர் கொண்ட உண்மை நிலை அறியும் அனைத்துலகக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களைப் போன்றவர்கள் அழைக்கப்பட மாட்டார்கள். காரணம் இசி-யை இழிவுபடுத்துவதே அவர்களுடைய ஒரே நோக்கமாகும் என வான் அகமட் சொன்னார்.

“இசி-யை குறை கூறும் அரசு சாரா அமைப்புக்களை அழைக்க வேண்டாம். அத்தகைய அமைப்புக்களையே பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அழைக்க விரும்புகிறார்.”

அந்த அரசு சாரா அமைப்புக்களுக்கு நிதி உதவி

அந்தக் கடமையைச் செய்வதற்குப் பல உள்நாட்டு அரசு சாரா அமைப்புக்களை இசி அடையாளம் கண்டுள்ளது என்றும் அவற்றுடன் இந்த மாதம் சந்திப்பு நடத்தப்படும் என்றும் வான் அகமட் தெரிவித்தார்.

 “அனைத்து மலேசியர்களுடைய நம்பிக்கையைப் பெறக் கூடிய, கட்சிச் சார்பற்றவை என நிரூபிக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்புக்களை நாங்கள் நாடுகிறோம்.”

தேர்தல் பார்வையாளராக அதிகாரத்துவ அங்கீகாரம் கொடுக்கப்பட்ட அரசு சாரா அமைப்பு ஒன்றையும் (அதன் அடையாளத்தை அவர் வெளியிடவில்லை) வான் அகமட் சாடினார். அது அறிக்கை ஏதும் கொடுக்காமல் இசி-யை பகிரங்கமாகக் குறை கூறியுள்ளது.

“எங்களுக்கு இது போன்ற அரசு சாரா அமைப்பு தேவை இல்லை.”

பல இடைத் தேர்தல்களுக்கு அதிகாரத்துவ பார்வையாளர் தகுதி வழங்கப்பட்ட Mafrel என்ற சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்கான மலேசியா அமைப்பையே தான் வான் அகமட் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படும் அரசு சாரா அமைப்புக்கள் தொண்டர்களைச் சேர்ப்பதற்கு உதவியாக அவற்றுக்கு நிதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.