பெர்சே 3.0ன் தாக்கம் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம்

பெர்சே 3.0ன் தாக்கம் நான்கு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். இவ்வாறு Cense என்று அழைக்கப்படும் வியூக ஆய்வு மய்யத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பூய் கே சூங் கூறியிருக்கிறார்.

“13வது பொதுத் தேர்தலில் அரசியலும் வாக்காளர்களுடைய எண்ணமும்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பேசிய போது பூய் அவ்வாறு கூறினார்.

அந்தக் கருத்தரங்கு நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமது கருத்துக்கு 2007ம் ஆண்டு நிகழ்ந்த முதலாவது பெர்சே பேரணியின் தாக்கத்தை அவர் ஆதாரமாகக் காட்டினார்.

“பொதுத் தேர்தல் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது முதலாவது பேரணியின் தாக்கத்தினால் அரசியல் சுனாமி ஏற்பட்டது. பிஎன் இதுவரை சந்தித்திராத இழப்புக்களை கண்டது. அதே போன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியும் அதே போன்ற தாக்கத்தைக் கொண்டிருக்கும் என நான் கருதுகிறேன்,” என்றார் பூய்.

ஆகவே ஜுன் மாதம் நாடு முழுவதும் தேர்தலை நடத்துவது பிஎன்-னுக்கும் பிரதமருக்கும் நல்லதல்ல என அவர் எண்ணுகிறார்.

செப்டம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தலை நடத்தலாம் என பூய் ஆலோசனை கூறினார்.

“ரமதான் நோன்பு மாதம் பெரும்பாலும் ஜுலை 21ல் தொடங்கு. நோன்புப் பெருநாள் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படும். ஹரி ராயா ஹாஜி அக்டோபர் 26ம் தேதி வருகிறது. ஆகவே 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் செப்டம்பர் மாதம் தேர்தலை நடத்துவதே சிறந்ததாகும்.”

“என்றாலும் 13வது பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் பருவமழைக் காலத்தின் போது நடத்தப்பட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்,” என்றார் பூய்.

நஜிப் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு 2013ம் ஆண்டு ஏப்ரல் 28 வரை காத்திருக்க முடியும்.

மசீச, கெரக்கான், சரவாக்கில் உள்ள எஸ்யூபிபி ஆகிய சீனர் அடித்தளக் கட்சிகள் ஆளும் கூட்டணியில் தங்கள் நலன்களை நல்ல முறையில் எடுத்துரைக்கத் தவறி விட்டதாகப் பெரும்பாலான சீன வாக்காளர்கள் கருதுவதாகவும் பூய் சொன்னார்.

ஜோகூரில் டிஏபி-யும் பக்காத்தான் ராக்யாட்டும் பெரிய அளவில் தேர்தல் ‘தாக்குதலை’ தொடங்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். 2008ம் ஆண்டு தேர்தலில் வட பகுதியில் அவை அவ்வாறு செய்தன. பினாங்கு, பேராக், கெடா ஆகியவற்றில் வெற்றியும் பெற்றன.

“அது இயற்கையான முன்னேற்றமாகும். காரணம் சிலாங்கூர் தவிர்த்து இந்த நாட்டில் அதிகமான கலப்பு இனத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் ஜோகூர் ஆகும்.”

பூய் ஏற்கனவே மசீச-வின் வியூக, கொள்கை ஆய்வு மய்யத்துக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த பெர்சே 3.0 பேரணிக்கு ஆதரவாக கலந்து கொண்ட மலேசிய சீனர்களுடைய எண்ணிக்கை முந்திய பேரணிகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பாஸ் ஹுடுட் சட்டத்தைக் காட்டி முஸ்லிம் அல்லாத வாக்காளர்களைச் சிக்க வைப்பது போன்ற காலத்திற்கு ஒவ்வாத  பிஎன் தந்திரங்கள் இந்த முறை பலன் அளிக்காது என எச்சரித்த பூய், சீனர்களுடைய அரசியல் சிந்தனைகள் ஆழமாகி விட்டதே அதற்குக் காரணம் என்றார்.

இந்தியர்கள் பிஎன் கட்டுக்குள் திரும்பியுள்ளனர்

500 ரிங்கிட் வழங்கும் நஜிப்பின் ஒரே மலேசியா உதவித் திட்டம் பிரதமருக்கான வாக்குகளாக மாறாமல் போகக் கூடும் என செல்வாக்கு மிக்க வலைப்பதிவாளரும் அரசியல் ஆய்வாளருமான முகமட் சயூத்தி ஒமார் கூறினார்.

ஏனெனில் அந்த ரொக்க நன்கொடைகளைப் பெற்றவர்கள் அதன் காரணமாக ஆளும் கட்சிக்கு தங்கள் ஆதரவை அளித்து விடும் சாத்தியமில்லை என அவர் சொன்னார். முகமட் சயூத்தி தமது கருத்துக்கு  ஒர் ஆதாரத்தையும் காட்டினார்.

“நான் என் சொந்த ஊரான கிளந்தான் ரந்தாவ் பாஞ்சாங்கிற்குச் சென்றிருந்தேன். 500 ரிங்கிட் உதவி யாருக்காவது கிடைத்ததா என நான் வினவினேன். யாரும் இல்லை என அவர்கள் பதில் அளித்தனர்.”

“அந்த நன்கொடையைப் பெறாதவர்களைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுத நான் எண்ணியிருந்ததால் அந்த உதவி யாருக்கும் கிடைக்கவில்லை என அவர்கள் சொன்னது எனக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது.”

தாங்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஒன்றை நடத்தப் போவதாகவும் அவர்கள் கூறினார். எதற்கு என நான் வினவிய போது தோக் குரு நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மந்திரி புசாராக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்காக என அவர்கள் பதில் அளித்தார்கள்.”

நேர்மையாக செயல்படும் வேட்பாளர்களையே மக்கள் விரும்புவதாக முகமட் சயூத்தி சொன்னார். நான்கு எதிர்மறையான பண்புகளைக் கொண்ட வேட்பாளர்களை அவர்கள் விரும்பவில்லை.

ஊகங்களைப் பரப்புவது, மற்றவர்களை தில்லுமுல்லு செய்வது, சர்ச்சையை ஏற்படுத்துவது, இரட்டை வேடம் போடுவது போன்றவற்றில் ஈடுபட விரும்பும் அரசியல்வாதிகளை மக்கள் விரும்பவில்லை.

இந்தியர்கள் வாக்கு பிஎன் பக்கம் திரும்பிக் கொண்டிருப்பதை UMCEDEL என்ற ஜனநாயகம், தேர்தல்கள் ஆகியவற்றுக்கான மலாயாப் பல்கலைக்கழக மய்யம் நடத்திய அந்தக் கருத்தரங்கில் பேசிய மலாய் நாளேடான சினார் ஹரியானின் ஜி மணிமாறன் ஒப்புக் கொண்டார்.

“பெர்சே 3.0ல் இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் காணப்படவில்லை. நஜிப் தொடங்கியுள்ள சீர்திருத்தங்களினால் இந்திய சமூகத்தில் 40 முதல் 45 விழுக்காட்டினர் வரை பிஎன் அரசாங்கத்தை ஆதரிப்பர் என நான் கூற முடியும்,” என்றார் அவர்.