பெர்சே ‘அதிகாரம் இல்லாத’ ஹனீப் குழுவை நிராகரிக்கிறது

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள “சுயேச்சையானது எனக் கூறப்படும்” குழுவை “அதிகாரம் இல்லாதது” எனக் கூறி பெர்சே நடவடிக்கைக் குழு நிராகரித்துள்ளது.

அந்தக் குழு அமைக்கப்படுவதற்கும் அதன் பணிகளை நிர்ணயிப்பதற்கும் எந்தச் சட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதற்கு எந்த விளக்கத்தையும் அரசாங்கம் இன்னும் தராததே அதற்குக் காரணம் என பெர்சே நடவடிக்கைக் குழு இன்று விடுத்த அறிக்கை கூறியது.
 
அந்தக் குழு பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்ளும் எனக் கூறப்படுவது பற்றியும் பெர்சே கேள்வி எழுப்பியது. “ஏனெனில் அந்தக் குழுவின் தலைவரான ஹனீப் ஒமார் ஏற்கனவே பெர்சே-க்கு எதிராக பாகுபாடான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அத்துடன் அந்தக் குழுவில் அங்கம் பெற்றுள்ள முகமட் மேடான் அப்துல்லா அரசாங்கத்துடன் தொடர்புடைய பெட்ரோனாஸில் வேலை செய்கிறார்.”

அந்த விவகாரம் மீது விசாரணை நடத்த முன் வந்துள்ள ஐநா அனுசரணையாளர் Frank La Rue, அவரது சகாவான Maina Kiai ஆகியோருடன் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையமுமே விசாரணையை  நடத்துவதற்குப் பொருத்தமானவர்கள் என்றும் பெர்சே கூறியது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணி தொடர்பில் நடத்திய விசாரணையைப் போல இப்போதும் சுஹாக்காம் போலீஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது மோது விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பெர்சே நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டது.