வழக்குரைஞர் மன்றம், நீதி 2.0-க்காக நடக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

“வழக்குரைஞர் மன்றம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என யார் சொன்னது. அவர்கள் இப்போது செய்வது மிகவும் மகத்தான துணிச்சலான செயலாகும்”

குழுவை வழக்குரைஞர் மன்றம் புறக்கணிக்கும், ஐநா அனுசரணையாளர் தேவை என்கிறது

நொறுக்கப்பட்டவன்: இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில் பெர்சே 3.0 வன்முறைகளை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு தலைமை தாங்க வெளிநபர் ஒருவரைக் கொண்டு வாருங்கள். காரணம் இப்போது உள்ள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதி கிடைக்காது.

கூட்டத்தினர் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாலும் இரசாயனம் கலந்த நீரைப் பாய்ச்சியதாலும் கூட்டத்தினரைப் போலீஸ்காரர்கள் அடித்ததாலுமே குழப்பமும் ஏற்பட்டது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்த போதிலும் அந்தப் பேரணி வன்முறையாகவும் குழப்பமாகவும் இருந்தது என ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து வெளியிடப்படும் ஜோடனைக் கதைகளைப் பாருங்கள்.

நல்ல வேளையாக பெரும்பாலான மக்கள் பதிலடி கொடுக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அதிகமான மக்கள் மருத்துவமனைகளுக்குப் போயிருப்பார்கள். உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கக் கூடும்.

பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக இருந்ததை அமைச்சர்கள் மறந்து விட்டனர். அதற்குப் பதில்  பெர்சே வன்முறையில் இறங்கியது என்றும் அது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்தப் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என அவர்கள் எண்ணுகின்றனர்.

ஹலோ: அந்த விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பது நமக்குத் தெரிந்து விட்டது. சாட்சிகளை அழைக்கும் அதிகாரமும் அதற்கு இல்லை. அதில் சாட்சியமளிக்கின்றவர்களுக்கு சட்டத்திலிருந்து விதி விலக்கையும் அது கொடுக்க முடியாது.

ஆகவே அது மக்களை ஏமாற்றுவதற்கு பிஎன் அரசாங்கம் நடத்துகின்ற ‘sandiwara’ (நாடகம்). எல்லாம் கண் துடைப்பு.

மக்களை எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியும் என்ற எண்ணத்தில் பிஎன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது.

பெரும்பான்மை மக்கள் அதன் ஆட்டத்தை புரிந்து கொண்டு விட்டனர்.

நம்பிக்கை123: வழக்குரைஞர் மன்றம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என யார் சொன்னது. அவர்கள் இப்போது செய்வது மிகவும் மகத்தான துணிச்சலான செயலாகும்

திறமையான, பொறுப்புள்ள, தூய்மையான அரசாங்கத்தை பெறுவதற்கு அந்த மன்றம் மக்களை தயார் செய்கிறது. அதனை இது வரை யாரும் செய்ததில்லை.

லாக்கர்123: ஒர் ‘orang puteh’-க்குப் பதில் ஏன் மலேசியர் ஒருவரைப் பரிந்துரை செய்யக் கூடாது ? பாகுபாடு காட்டாத எத்தனையோ கோபுர மலேசியர்கள் நம்மிடையே இருக்கின்றனர்.

ஐநா சம்பந்தப்பட வேண்டும் என வழக்குரைஞர் மன்றம் வலியுறுத்துவதற்கு  மறைமுகமான அரசியல் நோக்கம் ஏதும் இருக்குமோ ? ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவரை அல்லது ஒரு வழக்குரைஞரை நியமிக்கலாமே ? வெளியாட்களை ஏன் கொண்டு வர வேண்டும் ?

வழக்குரைஞர் மன்றம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்தக் குழுவை ஏன் புறக்கணிக்க வேண்டும் ? அந்தக் குழு விசாரணையில் பங்கு கொள்வதின் மூலம் அது தனது குறைகளை தெரிவிக்க முடியும்.

டெலிஸ்டாய்: வழக்குரைஞர் மன்றத்துக்கு பாராட்டுக்கள். நீங்கள் எங்களுக்கு பெருமை தந்துள்ளீர்கள். மற்றவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும் போது நீங்கள் பேச வேண்டும். இல்லை என்றால் மனித உரிமை மீறல்களுக்கு நீங்களும் துணை போவதாகக் குற்றம் சாட்டப்படும்.

நம்பாதவன்: இந்த நாட்டில் உள்ள வழக்குரைஞர்கள் மேலும் ஒரு படி எடுத்து வைக்க வேண்டும். வழக்குரைஞர் மன்றம், நீதி 2.0-க்காக நடக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.