பிகேஆர் உதவித் தலைவர்கள்: ஹிஷாம் ‘குழப்பம்’ என்ற கார்டை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்

பெர்சே 3.0 பேரணியின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுமென்றே குழப்பத்தை மூட்டினர் எனக் கூறுவதின் மூலம் அந்தப் பேரணியில் நிகழ்ந்த போலீஸ் வன்முறையை மறைப்பதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முயலுவதாக பிகேஆர் சாடியுள்ளது.

பேரணி குறித்த உண்மையை மறைப்பதற்கு தாம் மேற்கொண்டுள்ள முயற்சியின் வழி ஹிஷாமுடின் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்கிறார் என பிகேஆர் உதவித் தலைவர்களான நுருல் இஸ்ஸா அன்வாரும் என் சுரேந்திரனும் இன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

“அதிகாரிகளுடைய குற்றச் செயல்களுக்கும் வன்முறைகளுக்கும் நியாயம் கற்பிக்கவும் அமைச்சர் முயலுகிறார்,” என்றும் அவர்கள் கூறினர்.

ஏப்ரல் 28 பெர்சே பேரணியில் கலந்து கொண்டிருந்த சிலர் காயத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என நேற்று ஹிஷாமுடின் தெரிவித்திருந்தார்.

அமைச்சருடய அண்மைய குற்றச்சாட்டு “கோபள்ஸ் பாணியிலான”(பொய்ப் பிரச்சாரம்) பிரச்சாரம் என்றும் அவரது அமைச்சர் பதவி உறுதி மொழியை மீறுகிறது என்றும் அவர்கள் கூறினர்.

அதற்கு பொது மக்கள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் நடத்தப்பட்ட போலீஸ் வன்முறைகளுடன் ஹிஷாமுடினுக்கு நேரடித் தொடர்பு இருப்பது ஒரு பகுதி காரணமாக இருக்கலாம் என நுருல் இஸ்ஸாவும் சுரேந்திரனும் கூறினர்.

ஹிஷாம் விசாரிக்கப்பட வேண்டும்

அதன் காரணமாக பேரணிக்கு முன்னும் பின்னரும் ஹிஷாமுடினுடைய தவறான நடத்தை மீது சுயேச்சை விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

“அந்த விசாரணை நடத்தப்படும் வேளையில் கூட்டரசு அரசமைப்பின் 43வது பிரிவுக்கு இணங்க அமைச்சர் என்ற முறையில் ஹிஷாமுடின்  நிறுத்தி வைக்கப்பட வேண்டும்,” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தூய்மையான நியாயமான தேர்தல்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் 100,000 பேர் ஒன்று திரண்டனர்.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்த போதும் அந்தப் பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புக்களை மீறிய போது ஏற்பட்ட குழப்பம் பற்றியே இப்போது பெரும்பாலும் கவனம் செலுத்தப்படுகிறது.

போலீஸ் தடுப்புக்கள் மீறப்பட்டதும் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இரசாயனம் கலந்த நீரையும் பாய்ச்சினர். போலீஸ்காரர்கள் பத்திரிகையாளர்கள் உட்பட பலரை தாக்கினர்.

குறைந்தது மூன்று போலீஸ்காரர்களும் 60 ஆர்ப்பாட்டக்காரர்களும் காயங்களுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.