பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய தூய்மையான தோற்றம் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பிஎன் மீண்டும் கைப்பற்ற முடியாமல் போகலாம் என முன்னாள் மசீச தலைவர் லிங் லியாங் சிக் ஆரூடம் கூறியிருக்கிறார்.
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தவிர சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் ஊழலில் அல்லது அதிகார அத்துமீறலில் சம்பந்தப்படவே இல்லை. அதனால் அவர்களைப் பற்றிய நல்ல எண்ணம் உருவாகியுள்ளது என்றார் லிங்.
“பொதுவாக சீனர்கள் பிஎன்-னுக்குச் சாதகமாக இல்லை. ஆனால் பேராக்கில் வேறு வழி இல்லை. ஜோகூரில் பிஎன் ஒரளவு ஆதரவை இழக்கக் கூடும். ஆனால் அரசாங்கத்தை இழக்கும் அளவுக்கு அது இருக்காது.”
“இந்த பொதுத் தேர்தல் பிஎன்-னுக்கு மிகவும் சிரமமானதாகும். மிகவும் கஷ்டமாக இருக்கும். அரசாங்கம் பல்வேறு பெயர்களில் பணத்தைச் செலவு செய்வதால் பிஎன் வெற்றி பெற முடியும் என நான் நினைக்கிறேன். முன்பு இது போன்று நடந்ததே இல்லை,” என சீன மொழி நாளேடான சின் சியூ ஜிட் போ-வுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் லிங் கூறினார்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு (1986-2003) மசீச-வுக்குத் தலைமை தாங்கியுள்ள அவர், பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறுவது தான் அதன் வெற்றிக்கான அளவுகோலாக இருக்க முடியும் என கருதுகிறார்.
முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் ஒப்பிடுகையில் 2003ம் ஆண்டு அரசியலிலிருந்து விலகிய பின்னர் அரசியல், கட்சி விவகாரங்கள் பற்றி லிங் கருத்துக்களை வெளியிடுவதே இல்லை.
நடப்பு மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் பற்றியும் லிங்-கிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அந்த மசீச முன்னாள் தலைவர், சுவா விவேகமானவர் என்றும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் என்றும் வருணித்தார். என்றாலும் துரதிர்ஷ்டவசமாக செக்ஸ் வீடியோ விவகாரம் காரணமாக அவரது தோற்றத்துக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
“சுவா முயற்சிகளுக்கு சீனர்கள் ஆதரவளிப்பர் என நான் நம்புகிறேன். ஆனால் அவருக்கு அந்த டிவிடி பாதகமாக இருக்கிறது,” என அவர் சொன்னதாக சின் சியூ பேட்டி குறிப்பிட்டது.
மலேசிய அரசியல் என்னும் பெரிய தோற்றம் பற்றிய தமது சிந்தனைகளையும் லிங் அந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். மலேசியாவுக்கு இரண்டு கட்சி முறை நல்லது என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதற்கு திறமையான எதிர்த்தரப்புத் தேவை என்றார்.
“அது எதிர்த்தரப்பின் தரத்தைப் பொறுத்துள்ளது. அவை பயங்கரமாக இருந்தால் இரண்டு கட்சி முறையை அமலாக்க முடியாது. அவை பினாங்கைப் போல நல்லதாக இருந்தால்…”
“டிஏபி உண்மையில் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் கட்சித் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமிக்கும் இடையில் தகராறு நிலவுகிறது,” என்றார் லிங்.