13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு ஒரே தேர்தல் கொள்கை அறிக்கை

அடுத்த பொதுத் தேர்தலுக்கு பக்காத்தான் ராக்யாட் கூட்டுத் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் இன்று நிருபர்களிடம் பேசினார். மாநிலங்கள் விரும்பினால் உள்ளூர் பிரச்னைகளை அதில்  இணைத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

பக்காத்தான் கூட்டணி என்னும் முறையில் முதன் முறையாக வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது.

எல்லா இடங்களிலும் பிஎன்-னுக்கு நேரடிப் போட்டியை வழங்கப் போவதாக அது சூளுரைத்துள்ளது.

இட ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் ஏறத்தாழ “90 விழுக்காடு முடிந்து விட்டதாக” பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி தெரிவித்தார்.

அந்த விவகாரத்தை இன்னும் தீர்க்காத மாநிலங்களில் சபாவும் ஒன்று எனக் குறிப்பிட்ட அன்வார், அங்கு “ஆர்வத்தைத் தூண்டும் திருப்பம்” ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.

அது குறித்த மேல் விவரங்களைத் தர மறுத்து விட்ட அவர், அங்கு இட ஒதுக்கீடுகள் தொடர்பாக ‘பல கட்சிகளுடனும் தனிநபர்களுடனும்” பேச்சுக்கள் நடத்தப்படுவதாகக் கூறினார்.

சிக்கலான ஹுடுட் விவகாரம் மீண்டும் மீண்டும் தலைப்புச் செய்திகளாக இடம் பெறுவதை அன்வார் ஒப்புக் கொண்டார். அந்த விஷயம் ‘சிலருக்கு குழப்பத்தை’ ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பாஸ் உலாமா தலைவர் ஹருண் தாயிப், ஹுடுட் மீது அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டிஏபி அது குறித்து விளக்கம் கேட்டுள்ளது.”

என்றாலும் ஹுடுட் சட்டத்தைத் தொடாத பொதுக் கொள்கை வடிவத்தில் பாஸ் கட்சி உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெளிவுபடுத்தினார்.

தூய்மையான நியாயமான தேர்தல்கள் மீதான பெர்சே விவகாரம், கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் பிடித்தால் மட்டுமே எழக் கூடிய ஹுடுட் விஷயத்தைக் காட்டிலும் மிகவும் அவசர அவசியமானது என ஹாடி நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

“நாங்கள் அந்த விஷயத்தை உள்ளுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம். எங்களுக்கு பெர்சேயே இப்போது முன்னுரிமை பெற்ற விஷயமாகும். நாங்கள் இன்னும் அதிகாரத்துக்கு வரவில்லை. முதலில் அதிகாரத்தைப் பிடிப்பது முக்கியமாகும்,” என்றார் அவர்.

‘மாற்றங்களுக்கு இணக்கம் தேவை’

அது குறித்து கருத்துரைத்த டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், ஹுடுட் மீது 2011 செப்டம்பர் மாதம் தான் எடுத்த முடிவுக்கு பக்காத்தான் உண்மையாக இருப்பதாகச் சொன்னார்

அந்த விவகாரம் மீது “பாஸ் கருத்துக்களை மதிக்கும் பொருட்டு” புக்கு ஜிங்கா என அழைக்கப்படும் கொள்கை வடிவத்தில் ஹுடுட் ஒரு பகுதி அல்ல என அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஹுடுட் “கூட்டரசு அரசமைப்பையும் மீறுகிறது” என டிஏபி நம்புகிறது.

“பக்காத்தான் கூட்டரசு அரசமைப்பை நிலைநிறுத்துவதற்கு கடப்பாடு கொண்டுள்ளது,” எனக் கூறிய லிம் அதில் மலாய்க்காரர்கள், இதர பூர்வ குடி மக்கள் ஆகியோருடைய சிறப்பு நிலை, பாஹாசா மலேசியா, இஸ்லாம் ஆகியவையும் அடங்கும்.

2008ம் ஆண்டு அம்னோவில் மீண்டும் இணைவதற்கு அன்வார் முயற்சி செய்ததாக முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரும் இப்போது அம்னோ செனட்டருமான எஸாம் முகமட் நூர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதில் அளிப்பதை அன்வார் தவிர்த்தார்.

“நாம் அவருக்கு பதில் சொன்னால் அம்னோவில் அவரது விலை கூடி விடும்,” என அவர் கிண்டலாகச் சொன்னார்.
 
ஆர்டிஎம் நிருபர் தொடர்ந்து நெருக்கியதும் அன்வார் இவ்வாறு சொன்னார்: “நான் நேரடியாக  ஒலிபரப்பில் பேசுவதற்கு மூன்று நிமிடங்களை ஒதுக்குமாறு நீங்கள் அமைச்சரிடம் பேச முடியுமா ? முடியாது என்றால் நான் பதில் அளிக்க முடியாது. எஸாம் சொல்வது பொருத்தமில்லாதது.”