பிஎன்-னும் அதன் ‘அந்நிய’ ஆவி, போலி வாக்காளர்களுமே மலேசிய ஜனநாயகம் எதிர்நோக்கும் உண்மையான பிரச்னைகள் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்காத்தான் ராக்யாட் அதிகாரத்துக்கு வந்தால் பூமிபுத்ரா திட்டங்கள் மடிந்து போகும் என கூட்டரசு அமைச்சர் ஒருவர் கூறிக் கொண்டுள்ளதை மறுத்த போது அவர் அவ்வாறு கூறினார்.
மலாக்காவில் இயங்கிய மலாய் அரசை போர்ச்சுக்கலின் அல்பான்சோ டி அல்புகர்க் 1511 பிடித்த போது நிகழ்ந்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப், இந்த வட்டாரத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் தங்கள் பிடியை வலுப்படுத்திக் கொள்ள அது வழி வகுத்தது. அவை உள்ளூர் மக்களையும் ஆட்சி செய்தனர் என குறிப்பிட்டார்.
அது குறித்துக் கருத்துரைத்த லிம் “அந்த ஒப்புநோக்கு தவறானது, ஏனெனில் போர்த்துக்கீசியர்கள் அந்நியச் சக்திகள், 13வது பொதுத் தேர்தலை மலேசியர்கள் முடிவு செய்யப் போகின்றனர்,” என்றார்.
“அந்தக் குற்றச்சாட்டுக்களை உண்மையில் பக்காத்தான், அடுத்த பொதுத் தேர்தலில் முடிவு எடுக்கும் நிலையில் இருப்பதாக கூறப்படும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ள அந்நியர்கள் உட்பட ஆவி, போலி வாக்காளர்கள் காணப்படுவதைக் கருத்தில் கொண்டு பிஎன் மீதும் தேர்தல் ஆணையம் மீதும் சுமத்த வேண்டும்,” என அந்த பாகான் எம்பி சாடினார்.
“13வது பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வி கண்டால் பூமிபுத்ரா திட்டங்கள் இல்லாத 1511ம் ஆண்டுக்கு மலேசியா போக வேண்டியிருக்கும்,” என நோர் யாக்கோப் விடுத்த அறிக்கைக்கும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் பதில் அளித்தார்.
13வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிஎன், பக்காத்தான் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் ஆற்றும் பங்கை சிறுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது.
என்றாலும் வாக்காளர் பட்டியலில் அந்நியர்களும் ஆவி வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பக்காத்தான் நடத்தும் பிஎன் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக இடம் பெற்றுள்ளது.