புக்கிட் டமன்சாராவில் பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு உடற்பயிற்சி (exercises’) மேற்கொள்ளப்பட்டது.
மலாய் ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்க (PVTM)உறுப்பினர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட அதன் பங்கேற்பாளர்கள் “நாட்டின் பெயரைக் களங்கப்படுத்தி நாட்டின் எதிரியாக” அம்பிகா இருப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்த நிகழ்வை நடத்தியதாக கூறினர்.
கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்ட வியாபாரிகள் குழு ஒன்று மே 10ம் தேதி அம்பிகா வீட்டுக்கு முன்னால் “பேர்கர் கடையை’ அமைத்து ஆட்சேபம் தெரிவித்துக் கொண்டனர்.
இன்றைய “உடற்பயிற்சிகள்” காலை மணி 8.30க்குத் தொடங்கின. பெர்சே 3.0ன் கூட்டுத் தலைவர் வீட்டுக்கு முன்பு இம்மாதம் நடத்தப்பட்டுள்ள இரண்டாவது ஆட்சேபம் இதுவாகும்.
“நாட்டின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த முயன்ற ‘ஒர்
எதிரிக்கு” எதிராக ஆட்சேபம் தெரிவிப்பதற்கு ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்களாகிய எங்களுக்கு உரிமை உள்ளது,” என அந்தக் குழுவின் தலைவர் முகமட் அலி பாஹாரோம் கூறினார்.
அப்போது வீட்டில் இருந்த அம்பிகா வெளியில் வந்து அந்த குழுவிடமிருந்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக் கொண்டார்.
அம்பிகாவும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமும் பெர்சே 3.0 பேரணியைத் தூண்டி விட்டதாக கூறப்படுவது மீது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும் புகார் ஒன்றை மலாய் ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கமும் (PVTM), Suara Anak Muda 1Malaysia, Kelab Mahasiswa 1Malaysia என்ற இரண்டு இதர அரசு சாரா அமைப்புக்களும் இணைந்து டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் மே முதல் தேதி சமர்பித்தன.

























