கூட்டரசு நெடுந்சாலையில் அமைந்துள்ள பத்து தீகா மற்றும் சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அமைதி மறியலில் ஈடுபட்டனர். (படங்கள்) & (காணொளி)
நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி தொடங்கி 4 மணி வரை நீடித்த அந்த அமைதி மறியலில் மக்கள் கூட்டணி தலைவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சுங்கை ராசாவ் – பத்து தீகா டோல் சாவடிகள் இரண்டையும் மத்திய அரசாங்கம் உடனடியாக அகற்ற வேண்டும் என சுங்கை ராசா டோல் சாவடிக்கு அருகே அமைதி மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
காருக்கு 50 காசுகள் என 1988 ஆம் ஆண்டு முதல் டோல் சாவடி இயக்கப்பட்டு வந்தது. 1992ஆம் ஆண்டு பிளஸ் விரைவுப் பாதை உருவாக்கப்பட்டவுடன் புதிய கட்டணத்துடன் அவை இயங்கத் தொடங்கின.
பின்னர் ஆறு வழிப்பாதைகளாக சாலைகள் விரிவாக்கம் காணப்பட்டவுடன் 1993 ஆம் ஆண்டு சுங்கை ராசா பத்து தீகா டோல் சாவடிகள் முமுவடிவம் பெற்ற டோல் சாவடிகளாக உருப்பெற்றன.
தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் வெள்ளிக்கும் குறையாத வருமானம் பெறும் இரண்டு சாவடிகளும் போதுமென்ற அளவுக்கு பொருளீட்டிவிட்டதால் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அவை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டனர்.
நாள் ஒன்றுக்கு 10 லட்சம் வெள்ளி என்பது மிகவும் அதிக பட்சமான வருமானம். அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 24 ஆண்டுகளாக எந்தச் சலுகையும் வழங்காமல் இதே சாவடியை பணம் செலுத்தி பணியை வைத்திருப்பது நிர்வாகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. எனவே இந்த இரண்டு சாவடிகளையும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடுங்கள் என மத்திய அரசாங்கத்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மத்திய அரசாங்கம் இரண்டு டோல் சாவடிகளையும் வரும் பொதுதேர்தலுக்கு முன்னதாக மூடிவிட ஆணையிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.