பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு உரிமை இருப்பதாக Pusat Rakyat Loyar Burok அமைப்பு உறுப்பினரான வழக்குரைஞர் எட்மண்ட் போன் கூறுகிறார்.
ஆனால் நேற்று நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்தக் குழு விடுத்த செய்தியை தாம் ஆட்சேபிப்பதாக அவர் சொன்னார்.
காரணம் அதில் ‘பொது மக்களுக்கு நன்மை தரும் செய்தி’ ஏதுமில்லை என்றார் அவர்.
“அவர்களுடைய பிரச்னைகளை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களோ இல்லையோ வன்முறையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது,” என அந்த மனித உரிமை வழக்குரைஞர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
“நான் அந்தக் குழுவின் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் எனக்குப் புரிந்த வரையில் அம்பிகாவை அவமானப்படுத்துவது மட்டுமே அந்தச் செய்தியாகும்.”
“வன்முறையாக இல்லாத வரையில்” அம்பிகா வீட்டின் முன் அந்த ஆர்ப்பாட்டம் நிகழ்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் எட்மண்ட் கருதுகிறார்.
“அந்த ஆர்ப்பாட்டம் பொதுச் சாலை ஒன்றில் நடத்தப்பட்டது. தனிப்பட்ட வீட்டில் அல்ல. என்னைப் பொறுத்த மட்டில் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை,” என்றார் அவர்.
அம்பிகாவின் புக்கிட் டமன்சாரா வீட்டுக்கு முன்பு நேற்று 15 நிமிடங்களுக்கு மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்த 15 பேர் தங்கள் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு உடற்பயிற்சி செய்தது பற்றி அவர் கருத்துரைத்தார்.