நெகிரி செம்பிலான் அங்காடிகள் எதிர்க்கட்சி செராமாக்களில் வியாபாரம் செய்யத் தடை

நெகிரி செம்பிலானில் அரசாங்கம் வழங்கும் சாதனங்களைப் பயன்படுத்தும் அங்காடிக் கடைக்காரர்கள் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யும் செராமா கூட்டங்களில் தங்கள் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்தால் அவர்களுடைய அனுமதிகள் ரத்துச் செய்யப்படுவதோடு அவர்களுடைய சாதனங்களும் மீட்டுக் கொள்ளப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

“அவர்கள் வியாபாரம் செய்வதைத் தடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அரசாங்கம் வழங்கிய சாதனங்களையும் வசதிகளையும் பயன்படுத்துவதுதான் வருத்தமாக இருக்கிறது.”

“கம்போங் புக்கிட் செராம்பாயில் பாஸ் செராமா ஒன்றில் வியாபாரம் செய்த அங்காடிகள் பாமா என்னும் உணவு விவசாயப் பொருள் விற்பனை நிறுவனம் வழங்கிய குடைகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என பிஎன் கிளேவாங் சட்டமன்ற உறுப்பினர் யூனுஸ் ரஹ்மாட் கூறினார்.

அவர் திங்கட்கிழமையன்று கோலா கிளேவாங் குடியானவர் சந்தைக் கூடத்திற்கு வருகை அளித்த போது நிருபர்களிடம் பேசினார்.

மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானின் நேற்றைய இணையப் பதிப்பில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம், விவசாய அடிப்படைத் தொழில், தொழில் முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுக்குப் பொறுப்பான நெகிரி செம்பிலான் மாநில ஆட்சி மன்ற உறுப்பினரும் ஆவார்.

அத்தகைய சம்பவங்களைக் கண்காணித்து எதிர்க்கட்சி செராமா நிகழ்வுகளுக்கு அருகில் அரசாங்க நிறுவனங்களின் சின்னங்களைக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தி பொருட்களை விற்கும் அங்காடிகள் பற்றி தமக்குத் தகவல் கொடுக்குமாறும் அவர் பாமா அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

எதிர்க்கட்சி செராமாக்களில் வியாபாரம் செய்வதாகக் கண்டு பிடிக்கப்படும் அங்காடிக் கடைக்காரர்களின் அனுமதிகள் ரத்துச் செய்யப்படுவதோடு அரசாங்கம் கொடுத்த சாதனங்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டியிருக்கும் என்றும் யூனுஸ் சொன்னார்.

அதிகார அத்துமீறல் என எதிர்க்கட்சிகள் ஆவேசம்

அது குறித்து உடனடியாகக் கருத்துரைத்த ராசா எம்பி அந்தோனி லோக், யூனுஸ் விடுத்த அறிகையை கடுமையாகச் சாடியதுடன் கட்சி நோக்கங்களுக்காக பிஎன் வழி நடத்தும் மாநில அரசாங்கம் “அதிகார அத்துமீறலிலும்” ஈடுபடுவதாகச் சொன்னார்.

“அந்த ஒதுக்கீடுகள் குடியானவர்களுக்கு உதவுவதற்காகும். அங்காடிகள் தங்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம். வியாபாரத்துக்கு வாய்ப்பு இருக்கும் இடத்துக்கு அவர்கள் செல்வது இயல்பு.”

“எதிர்க்கட்சி செராமா ஒன்றில் தங்கள் பொருட்களை அவர்கள் விற்க வேண்டும் என்றால் அவர்களுக்கு புதிய குடைகளையும் சாதனங்களையும் யூனுஸ் வாங்கிக் கொடுப்பாரா ? அவர்களுடைய பொருட்கள் விற்காமல் போனால் யூனுஸ் அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வாரா ?” என டிஏபி-யைச் சேர்ந்த அந்த எம்பி சாடினார்.

“நான் யூனுஸிடம் கேட்கிறேன்: “அங்காடிகள் அங்கு வாணிகம் செய்ய முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்களுடைய பணம் ஹராமானதா ?” என லோக் வினவினார்.

எதிர்வரும் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் எண்ணியுள்ள மாநிலங்களில் நெகிரி செம்பிலானும் ஒன்றாகும்.