தேர்தல் முறையில் காணப்படுகின்ற ‘கவலை அளிக்கும்’ நிலையைச் சமாளிப்பதற்கு தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே ‘வாக்களிப்பு, கண்காணிப்பு’ என்னும் இரு முனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
“தேர்தல் மோசடிகளை முறியடிக்கும் பொருட்டு வாக்களிக்க முடிந்த அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்கச் செல்ல வேண்டும்,” என பெர்சே கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட் கேட்டுக் கொண்டார்.
அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களைச் சந்தித்த போது அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
“தேர்தல் அதிகாரிகள் ஐயத்தை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து சாத்தியமான தேர்தல் மோசடிகளை கண்காணித்து சுட்டிக் காட்ட வேண்டும்.”
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு “100 விழுக்காடு தோல்வி” அடைந்து விட்டதாக முத்திரை குத்திய பாக் சமாட், தேர்தல் ஆணையத்தை “நம்ப முடியாது” என்றார்.
ஆகவே மக்கள் எழுச்சி பெற்று தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்கான தங்களது உரிமையை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு மக்கள் தலையில் விழுந்து விட்டதாக அந்த தேசிய இலக்கியவாதி குறிப்பிட்டார்.
மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தால் மட்டுமே தேர்தல் மோசடிகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை சமாளிக்க முடியும் என பாக் சமாட் வலியுறுத்தினார்.
அந்த மோசடிகளில் வாக்கு எண்ணிக்கையை குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு சாதகமாக திருப்பும் பொருட்டு தேர்தல் மாவட்டங்களில் ஆவி வாக்காளர்கள் வெள்ளம் போல் குவிக்கப்படும் சம்பவங்களும் அடங்கும் என்றார் அவர்.
புகார்களை கவனிப்பதற்கான முயற்சி
அந்த இயக்கத்தின் ‘கண்காணிப்பு’ அம்சத்தில் பெர்சே தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான Jom Pantau, Tindak Malaysia. ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் பாக் சமாட் அறிவித்தார்.
அந்த நிருபர்கள் சந்திப்பில் உடனிருந்த Jom Pantau பேராளர் அருள் பிரகாஷ், அந்த முயற்சி குறித்து விளக்கமளித்தார்.
தேர்தல் மோசடிகள் பற்றிய புகார்களை அறிந்து அவற்றை பொது மக்கள் பார்வைக்காக இணையத்தில் சேர்ப்பதே அந்த முயற்சியின் அடிப்படையாகும். அவ்வாறு செய்வதின் மூலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
அத்தகைய மோசடிகள் குறித்து தெரிய வந்தால் பொது மக்கள் குறுஞ்செய்தி, மின் அஞ்சல் அல்லது இணையம் வழியாக தகவல் கொடுக்கலாம். பின்னர் அந்தப் புகார்கள் சரி பார்க்கப்பட்டு http://www.pru13.info என்னும் இணையத் தளத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என அவர் சொன்னார்.
தேர்தல் முகவர்களாக பணியாற்றுவதற்கு பொது மக்களை Tindak Malaysia பயிற்றுவிக்கும் என அந்த அமைப்பின் பேராளர் பிஒய் வோங் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு உதவும் பொருட்டு 80,000 தேர்தல் முகவர்களுக்குப் பயிற்சி அளிக்க Tindak Malaysia எண்ணியுள்ளது.
Tindak Malaysia வழங்கும் பயிற்சியின் வழியும் பெயர் குறிப்பிட்டு வெட்கப்பட வைக்கும் Jom Pantau நடவடிக்கை வழியும் தேர்தல் மோசடிகளைக் கண்டு பிடித்து தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.