முன்னாள் ஒட்டுநர்: நடிகை 1 மில்லியன் ரிங்கிட்டை வங்கியில் போட்டதை நான் பார்த்தேன்

கிராமப்புபுற மேம்பாட்டு அமைச்சர் ஷாபியி அப்டாலிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 1 மில்லியன் ரிங்கிட்டை நடிகை ஸாஹிடா முகமட் ராபிக்   வங்கியில் செலுத்தியைத் தான் பார்த்ததாக அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் ஒருவர் கூறிக் கொண்டுள்ளார்.

ஸாஹிடா இவ்வளவு பெரிய தொகையை ஒரே சமயத்தில் போட்டதை அப்போது தான் பார்த்ததாக அந்த 38 வயதான ஒட்டுநர் நூர் அஸ்மான் அஸெமி தெரிவித்தார். அவர் முதன் முறையாக நிருபர்களிடம் பேசினார்.

“அவ்வளவு ரொக்கத்தை வங்கியில் செலுத்தியதும் நான் வியப்படைந்தேன். அவர் அவ்வளவு பணத்தை வைத்திருக்கிறார் என்பதும் என்னுடைய அப்போதைய முதலாளி (ஷாபியி) அந்தப் பணத்தைக் கொடுத்தார் என்பதும் எனக்குத் தெரியாது.”

“வழக்கமாக ஷாபியி ஸாஹிடாவை  வாரம் ஒரு முறை சந்திப்பார். அப்போது அவர் (அமைச்சர்) பணம் கொடுப்பார். அது 100,000 ரிங்கிட்டிலிருந்து 200,000 ரிங்கிட் வரையில் இருக்கும்.”

“ஆனால் கடந்த ஆண்டு வங்கியில் போடப்பட்ட தொகைகளில் மிகப் பெரியது 1 மில்லியன் ரிங்கிட் ஆகும்,” என்றார் நூர் அஸ்மான்.

ஸாஹிடாவின் 200,000 ரிங்கிட் பணத்துடன் அவர் தலைமறைவாகி விட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி  அவர் போலீசில் புகார் செய்த பின்னர் அவரது கதை வெளியானது.

அவரது போலீஸ் புகாரின் விவரங்களை பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சுராய்டா கமாருதின் ஏப்ரல் 18ம் தேதி அம்பலப்படுத்தினார்.

அதற்குப் பின்னர் ஸாஹிடாவும் ஷாபியியும் அவற்றை மறுத்துள்ளதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மருட்டியுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டார்

ஷாபியி தம்மை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸாஹிடாவின் கார் ஓட்டுநராக நியமித்தார் என்றும் அமைச்சரிடமிருந்து பெறும் பணத்தை அந்த நடிகை வங்கியில் போடும் ஒவ்வொரு முறையும் அவருடன் சென்றதாகவும் அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினருமான நூர் அஸ்மான் கூறிக் கொண்டார்.

ஸாஹிடா சம்பந்தப்பட்ட சில ரகசியமான தகவல்களைத் தாம் ஷாபியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்ட பின்னர் ஸாஹிடாவுடனான தமது உறவுகள் கசப்படைந்ததாக அவர் சொன்னார்.

அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட சுமையை தாங்கிக் கொள்ள முடியாததால் தாம் அந்த விஷயத்தை ஷாபியிடம் தெரிவித்ததாகவும் நூர் அஸ்மான் கூறினார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 29ம் தேதி ஸாஹிடாவின் கார் ஒட்டுநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு மூன்று நாட்கள் கழித்து ஸாஹிடா, தாம் 200,000 ரிங்கிட்டுடன் தலைமறைவாகி விட்டதாக பழி சுமத்தி போலீசில் புகார் செய்தார் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

என்றாலும் ஸாஹிடா தமக்கு எதிராக தவறான போலீஸ் புகாரைக் கொடுத்ததாக மார்ச் 13ம் தேதி தமது சொந்தப் போலீஸ் புகாரை நூர் அஸ்மான் சமர்பித்தார்.

“அதனைத் தொடர்ந்து போலீசார் என்னை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து சிறப்பு போலீஸ் பிரிவினர் விசாரித்தனர்,” என்றார் அவர்.

தாம் விடுவிக்கப்பட்ட பின்னர் அடையாளம் தெரியாத பல தனிநபர்கள் தம்மை மிரட்டியதாகவும் தமது வீடு உடைக்கப்பட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

அந்த நிருபர்கள் சந்திப்பின் போது சுராய்டா, பிகேஆர் அரசியல் பிரிவு உறுப்பினர் சிவராசா ராசையா, கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் லத்தீபா கோயா ஆகியோரும் இருந்தார்கள்.