2008ம் ஆண்டு பிற்பகுதியில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தாம் டாக்டர் முகமட் கிர் தோயோவிடம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை காப்பார் எம்பி எஸ் மாணிக்கவாசகம் மறுத்துள்ளார்.
வலைப்பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்த மாணிக்கவாசகம், பிகேஆரைக் கைவிடுவதற்கு அந்தத் தொகையை கொடுக்க முன் வந்தது கிர் தோயோவே என்று சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
சில விஷயங்கள் மீது தாம் வர்த்தகக் குற்ற விசாரணைத் துறையைச் சந்தித்த பின்னர் தாம் உணவு விடுதி ஒன்றில் கிர் தோயோவை சந்தித்ததை மாணிக்கவாசகம் ஒப்புக் கொண்டார்.
“நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு அந்தப் பணத்தைக் கொடுக்க அவர் முன் வந்தார். அதே வேளையில் மணல் சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னை அப்போது சூடான செய்தியாகி விட்டதாகவும் அவர் நகைச்சுவையாக கூறினார்,” என அந்த காப்பார் எம்பி சொன்னார்.
இதனிடையே மாணிக்கவாசகமே தம்மைச் சந்தித்தாகவும் கட்சியிலிருந்து விலகுவதற்குப் பணம் கேட்டதாகவும் கிர் தோயோ அந்தப் பத்திரிக்கையிடம் கூறியிருக்கிறார்.
“அவர் என்னிடம் கேட்டார். அது பிஎன் பழக்கம் அல்ல என்பதால் அவ்வாறு செய்ய முடியாது என நான் கூறினேன். அவர் சுயேச்சையாக மாறினால் மற்ற பிஎன் எம்பி-க்களைப் போன்று சிறப்பு ஒதுக்கீடுகளைப் பெறுவார் என்று மட்டும் நான் சொன்னேன்”, என அந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் தெரிவித்தார்.
அந்தக் கடைசிக் கூட்டத்துக்கு முன்பு மாணிக்கவாசகத்தை ஒரு முறை சந்தித்ததை கிர் தோயோ ஒப்புக் கொண்டார்.