செனபோன்: பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டால் நான் எதிர் வழக்காடுவேன்

ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் இருந்ததின் மூலம் தாம் மலேசிய சட்டங்களை மீறியுள்ளதாக கூறப்படுவது மீது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸ்திரேலிய சுயேச்சை செனட்டர் நிக் செனபோன் தயாராக இருக்கிறார்.

2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த விசாரணையிலிருந்தும் “தாம் விலகிப் போகப்” போவதில்லை என மலேசியாகினிக்கு வழங்கிய தொலைபேசிப் பேட்டியில் அவர் கூறினார்.

“என் மீது குற்றம் சாட்ட மலேசிய அதிகாரிகள் எண்ணியிருந்தால் எதிர் வழக்காடுவதற்கு நான் மலேசியாவுக்கு வரத் தயாராக இருக்கிறேன்,” என்றார் செனபோன்.

“நான் ஒடவும் மாட்டேன், விலகவும் மாட்டேன். நான் பெரு மதிப்பு வைத்துள்ள ஒரு நாட்டுக்கு வருகை புரிய முடியாமல் தடுக்கப்படுவதைக் காண நான் விரும்பவில்லை.”

என்றாலும் தமக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் எனத் தாம் கேள்விப்படவே இல்லை என்றார் அவர்.

செனபோன் மீது கூட்டங்களில் குடிமக்கள் அல்லாதார் கலந்து கொள்வதைத் தடை செய்யும் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 4(2)(ஏ)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என  The Mole செய்தி இணையத் தளத்தில் வெளியான தகவல் பற்றி செனபோன் கருத்துரைத்தார்.

என்றாலும் தூய்மையான நேர்மையான தேர்தல்களைக் கோரி நடத்தப்பட்ட அந்த மாபெரும் பேரணியில் தாம் பங்கேற்பாளராகக் கலந்து கொள்ளவில்லை என்றும் மலேசிய தேர்தல் முறை குறித்த அனைத்துலக உண்மை நிலை அறியும் குழுவின் ஒர் உறுப்பினர் என்ற முறையில் பார்வையாளராக மட்டுமே இருந்ததாக அந்த செனட்டர் வலியுறுத்தினார்.

“மலேசிய அதிகாரிகள் என்னுடன் பேச விரும்பினால் அவர்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சி கொள்வேன். அது அமைதியான பேரணி நான் நினைத்தேன். ஆனால் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதும் தவறு நிகழ்வதாக பார்வையாளர் என்ற ரீதியில் நான் கருதினேன்,” என்றார் அவர்.