விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!

உலக முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது.

இலங்கை இராணுவத் தாக்குதலில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிகேட்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரவும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்றும் இன்றும் கடைப்பிடிக்கின்றனர்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. (படங்கள்)

செம்பருத்தி.கொம் எற்பாடு செய்திருந்த இந்நினைவு நாள் நிகழ்வுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.

ஈகைச்சுடர் ஏற்றலுக்கு பின்னர் “விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!” என்ற பாடல் ஒலிக்க நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மாண மாணவிகளின் நடனம், கவிதை, என பல அங்கங்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து வழக்கறிஞர் சி. பசுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மருத்துவர் ஐங்கரன், செமுவல் ராஜ், குமாரி மகா மற்றும் மருத்துவர் சண்முகசிவா ஆகியோரின் உரைகள் முறையே இடம்பெற்றது.

இந்நிழ்வின்போது 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் இடம்பெற்ற போரில் தான் பெற்ற துன்பங்களையும் நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபங்களையும் ஈழத்து பெண்மணி ஒருவர் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 7.30 மணி அளவில் பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு இரவு மணி 10 அளவில் நிறைவுபெற்றது.

TAGS: