மலேசியாவில் நாம் பார்க்கும் பன்னாட்டுச் செய்திகளும் உலகின் மற்ற பகுதிகளில் பார்க்கப்படும் செய்திகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்றுதான் தோன்றுகிறது.
இங்கு பார்க்கப்படும் பிபிசி, சின்பிசி, ஆஸ்திரேலிய ஒளிபரப்புக்கழகம், அல் ஜசீரா உள்பட அனைத்துலக ஒளிபரப்பு நிறுவனங்களின் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்படாமல் முதலில் பதிவுசெய்யப்பட்டு 5-நிமிடம் தாமதித்தே ஒளிபரப்படுவதாக தெரிகிறது. அந்த 5-நிமிட இடைவெளியில் விரும்பத்தகாத விசயங்கள், அன்வார் இப்ராகிம் போன்றவர்கள் பற்றிய செய்திகள் அவற்றில் உள்ளனவா என்று தேடிப்பார்க்கப்படுகிறது.
செய்திகள் தணிக்கை செய்யப்படும் விவகாரம் ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின்போதுதான் வெளியில் தெரியலாயிற்று.
பேரணியில் வன்முறை தலையெடுத்தபோது அல் ஜசீரா செய்தியாளார் ஹேரி ஃபவ்செட், போலீசார் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை அடிப்பதைப் பார்த்து அதைப் படம் பிடிக்க முயன்றார்.ஆனால்,அவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள். அவருடைய கேமிராவும் தரையில் விழுந்தது.
அன்றிரவு பேரணி பற்றிய செய்தி அல் ஜசீராவில் ஒளியேறியபோது மலேசியாவில் ஓளியேறிய செய்தி அறிக்கையில் போலீஸ் வன்செயல்கள் நீக்கப்பட்டிருந்தது.அல் ஜசீராவில் மட்டுமல்ல, பிபிசி செய்திகளும்கூட போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதைக் காண்பிக்கும் பகுதிகள் நீக்கப்பட்டுத்தான் ஒளியேறியதாக வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டு அறை
ஆஸ்ட்ரோ தலைமையகத்தில் ஒரு சிறிய அறை இருப்பதாக அதன் முன்னாள் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். அதன்வழியேதான் எல்லா செய்தி அறிக்கைகளும் ஒளிபரப்பாகின்றனவாம். அங்குதான் செய்திகளில் ஆட்சேபணைக்குரிய விசயங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கப்படுகின்றது.
இந்தத் தணிக்கை பிரிவுக்கு வின்செண்ட் டி பால் என்னும் “செய்திக் கட்டுப்பாட்டு அதிகாரி” தலைமை வகிப்பதாக ஏசிய செண்டினலிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே,“ஹேரி ஃபாவ்செட்டின் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டது ஏன் என்று அஸ்ட்ரோவிடம் விளக்கம் கோருவோம்”, என டோஹாவில் உள்ள அல் ஜசீராவின் உலக மற்றும் ஊடக உறவுகளுக்கான தலைவர் ஒசாமா சயிட் கூறினார்.
“உள்ளூர் விதிமுறைகளுக்கு முரணாக இருந்தது என அஸ்ட்ரோ கூறுமானால் அந்த விதிமுறைகளை அது விளக்க வேண்டும். செய்திகள் தணிக்கை செய்யப்படும் என்றால் எப்போது தணிக்கை செய்யப்படுகிறது என்பதைத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
“என்ன நடந்தது என்பதை அஸ்ட்ரோ இதுவரை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அன்றைய நிகழ்வு பற்றி உண்மையான தகவல்களைத்தான் எங்கள் செய்தியறிக்கை கொண்டிருந்தது.அதில் குறுக்கிடுவது தேவையற்றது.உலகில் வேறு எங்கும் எங்கள் செய்தி அறிக்கை இப்படி தணிக்கை செய்யப்பட்டதில்லை”, என்றாரவர்.
ஃபவ்செட்டின் செய்தியறிக்கை பின்னர் யுடியுப்பில் ஒளியேற்றம் செய்யப்பட்டது.இதுவரை 250,000பேர் அதைப் பார்த்திருப்பதாக சயிட் தெரிவித்தார்.
– Asia Sentinel