துணை ஐஜிபி காலிட் வீட்டின்முன் தோசைக் கடை: நிகழ்வு நடைபெறாது

பெர்சே 3.0 இன் இணைத் தலைவர் அம்பிகாவின் வேண்டுகோளுக்கு மதிப்பு அளித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 20 இல் மலேசிய போலீஸ் படையின் துணை ஐஜிபி காலிட் அபு பாக்காரின் வீட்டின்முன் போடவிருந்த தோசைக் கடை நிகழ்வு நடைபெறாது என்று அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த 20 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் வர்ஹாஅமான் தலைமைச் செயலாளர் பாரதிதாசன் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று வர்ஹாஅமான் துணை ஐஜிபியின் வீட்டின்முன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 க்கு தோசைக் கடை போடப்போவதாக அறிவித்திருந்தது. ஒரு தனிப்பட்ட மனிதரின் வீட்டின்முன் கடை போடுவது குற்றமல்ல என்று மலேசிய போலீஸ் படையின் துணை ஐஜிபி காலிட் அபு பாக்கார் கூறியிருந்தார். அம்பிகாவின் வீட்டின்முன் பர்ஹர் கடைகள் போடப்பட்டிருந்தது குற்றமல்ல என்பது அவரின் நிலைப்பாடாக இருந்தது. அது குற்றமில்லை என்றால் தோசைக் கடை போடுவதும் குற்றமில்லை என்பது வர்ஹாஅமானின் நிலைப்பாடாகும்.

துணை ஐஜிபியின் வீட்டின்முன் தோசைக் கடை போடும் வர்ஹாஅமானின் முடிவை மறுஆய்வு செய்யுமாறு அம்பிகா வேண்டுகோள் விடுத்திருந்தார். “ஒரு தனிப்பட்டவரின் தனிமையை மீறும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு நான் அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் விடுத்த வேண்டுகோளை ஃப்ரீமலேசியாடிடே இன்று வெளியிட்டுள்ளது.

“இந்த வேண்டுகோளுக்கு, அம்பிகாவின் வேண்டுகோளுக்கு, மதிப்பளிக்கிறோம். தனிப்பட்டவரின் தனிமையை மீறக்கூடாது என்ற அவரின் அறிவுரையை நாங்கள் மனமார ஏற்றுக்கொள்கிறோம். அந்த அறிவுரையை அனைவரும், அவர் யாராக இருந்தாலும் சரி, ஏற்றுக்கொள்ள வேண்டும். அம்பிகாவின் அறிவுரையின் அடிப்படையின் அறிவுசார்ந்த ஒரு புதிய மலேசிய சமுதாயம் உருவாகட்டும்”, என்று பாரதிதாசன் கூறினார்.

இன்று காலையில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விடுத்த செய்தியில் வர்ஹாஅமான் அம்பிகாவின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததற்காக அதற்கு பாராட்டு தெரிவித்தார். தோசைக் கடை போடும் நிகழ்வை நிறுத்துவதன்மூலம் வர்ஹாஅமான் நாட்டுக்கு பெரும் சேவை செய்த பெருமைக்குரியதாகும் என்று அவர் கூறினார்.

பெர்காசாவின் “ஈமச்சடங்கு”, அம்பிகாவின் வீட்டின்முன் பர்ஹர் கடைகள், அவமானகரமான உடற்பயிர்ச்சி போன்ற நடவடிக்கைகளால் இந்நாடு உலக மக்களின் ஏளனத்திற்கு இலக்காகியுள்ளது. தோசைக் கடை போட்டால் நாடு ஏளனத்தின் உச்சகட்டத்தை எட்டும். “இக்காரணங்களுக்காக நான் தோசைக் கடை போடுவதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற அம்பிகாவின் வேண்டுகோளை ஆதரிக்கிறேன்”, என்று கிட் சியாங் அவரது செய்தியில் கூறியுள்ளார்.

 தோசைக் கடை போடுவது நடைபெறாது என்றாலும், துணை ஐஜிபி கேட்டுக்கொண்டவாறு அவருக்கு “தோசை தெலுர்” வழங்கப்படும்.

 

 

(மேல் விபரம் பின்னர்)