பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் பின்புறத்தைக் காட்டி ‘உடற்பயிற்சி’ செய்த முன்னாள் இராணுவ வீரர்கள் மலேசியர்கள் தங்களை குறை கூறாமல் நன்றி சொல்ல வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அம்பிகா வீட்டுக்கு முன்னாள் தங்களது பின்புறத்தை ஆட்டிக் காட்டியது பெர்சே இன்னொரு பேரணியை நடத்துவதிலிருந்து தடுத்து விட்டது என மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கத் தலைவர் அலி பாஹாரோம் கூறினார்.
“பெர்சே 4.0 இல்லை என அம்பிகா சொல்லி விட்டார். ஆகவே மக்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தோம்.”
“முன்னாள் இராணுவ வீரர்களுடைய குரல்களுக்குச் செவி சாய்த்ததற்காக அம்பிகாவுக்கு நன்றி,” என அவர் சொன்னார்.
புக்கிட் டமன்சாராவில் தாங்கள் நடத்திய அந்தப் பயிற்சி குறித்து கூறப்படும் குறைகளைக் குறிப்பிட்ட அவர், அந்த உடற்பயிற்சி மற்ற பயிற்சிகளிலிருந்து மாறுபட்டதல்ல என்றார்.
“ஒவ்வொரு உடற்பயிற்சியிலும் குனிவது சம்பந்தப்பட்டுள்ளது. நாங்கள் சரியான முறையில்தான் செய்தோம். நாங்கள் அமைதியாக வந்தோம். எங்கள் தொந்திகளை கரைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி அது,” என்றார் அவர்.