தனியார் வீடு ஒன்றுக்கு முன்னாள் ‘பின்புறத்தை காட்டும் உடற்பயிற்சியை’ மேற்கொண்ட முன்னாள் இராணுவ வீரர்கள் குழுவை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கண்டித்துள்ளதைத் தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படலாம்.
தனியார் வீடு ஒன்றுக்கு முன்னாள் மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் நியாயமற்றது எனக் கூறியதின் மூலம் கைரி எல்லையைத் தாண்டி விட்டார் என அந்தச் சங்கத் தலைவர் அலி பாஹாரோம் கூறினார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கைரியின் வீட்டில் ‘இராணுவ பாணியிலான நடனப் பயிற்சியை’ (senaman tarian ala gempur) நடத்தப் போவதாக அலி மருட்டினார். அது குறித்து சங்கத்தின் மற்ற உறுப்பினர்களுடனும் விவாதிக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.
“அதற்கான தேதியும் நேரமும் பின்னர் உறுதி செய்யப்படும்.ஆனால் நாங்கள் நிச்சயம் அதனை நடத்துவோம்.”
“கைரிக்கு தலைமை தாங்குவதற்கு தகுதி இல்லை. அவருக்கு பதவிகளில் மட்டும் ஆர்வம் உள்ளது. அவரது அறிக்கையால் முன்னாள் இராணுவ வீரர்களான நாங்கள் உண்மையில் மிகவும் ஆத்திரமடைந்துள்ளோம்,” என அலி சொன்னார்.
“அம்னோ இளைஞர் தலைவர் முதலில் தமது இளைஞர் பிரிவைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் அம்னோ இளைஞர் பிரிவு நாளுக்கு நாள் பலவீனமடைவதாகத் தோன்றுகிறது.”
“தாம் அமைச்சராக நியமிக்கப்படாததால் ஆத்திரமடைந்துள்ள அவர் அதனைச் சொல்லியிருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்,” என்றார் அவர்.
தூய்மையான நியாயமான தேர்தல்கள் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணிக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று புக்கிட் டமன்சாராவில் உள்ள பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னாள் அலியும் 15 முன்னாள் இராணுவ வீரர்களும் ‘பின்புறத்தை காட்டும் உடற்பயிற்சியை’ நடத்தினார்கள்.
அது குறித்து கருத்துரைத்த கைரி, அந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அதனால் உலகம் நாட்டைப் பார்த்து ஏளனமாக சிரிக்கக் கூடும் என்றும் கூறியிருந்தார்.