பத்திரிக்கைப் படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது குவாங் மிங் டெய்லி என்ற சீன மொழி நாளேட்டின் படிப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் கைருல் அஸ்ரி முகமட் சோப்ரி, ஷாருல் நிஸா அப்துல் ஜைலில் என்ற அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் 3,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.

வோங்கிற்கு எதிராக கிரிமினல் வன்முறையைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 350வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் மூன்று மாத சிறைத் தண்டனை, ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். கைருலும் ஷாருல் நிஸாவும் இன்னும் தலை மறைவாக இருக்கும் மேலும் இருவரும் சேர்ந்து ஏப்ரல் 28ம் தேதி ஜாலான் துன் பேராக்-ஜாலான் ராஜா சந்திப்பில் மாலை மணி 5.20க்கும் 5.30க்கும் இடையில் வோங்கைத் தாக்கியதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.