பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்செயல்கள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சுயேச்சைக்குழுவுக்கு அதன் ஆய்வுஎல்லை பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் அது தன் முதலாவது கூட்டத்தைக்கூட இன்னும் நடத்தவில்லை என்று அதன் தலைவரும் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலுமான(ஐஜிபி)முகம்மட் ஹனிப் ஒமார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“குழுவின் ஆய்வு எல்லை குறித்து இன்னும் தகவல் பெறப்படவில்லை. அடுத்த வாரம் கிடைக்கலாம்”, என்றவர் ஒரு சுருக்கமான குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.
“ஆய்வுஎல்லை தெரியாத நிலையில் குழு கருத்துரைப்பது முறையாகாது”, என்றாரவர். குழுவின் விசாரணையில் கலந்துகொள்ளப்போவதில்லை என வழக்குரைஞர் மன்றமும் பெர்சேயும் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்கப்பட்டதற்கு ஹனிப் இவ்வாறு கூறினார்.
குழுவின் ஆய்வு எல்லை என்பது அறுவர் அடங்கிய குழு எதைப் பற்றியெல்லாம் விசாரிக்கலாம், எப்படியெல்லாம் விசாரிக்கலாம் என்று வழிகாட்டும் முறைகளாகும்.
இந்த அறுவர் குழு பற்றி உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் மே 9-இல் அறிவித்தார்.