ஐரின் பெர்னாண்டஸை தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸ் விசாரிக்கக் கூடும்

தெனாக்கானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டஸ், தொடர்ந்து நாட்டின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுவது மீது தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்ட பின்னர் போலீசார் அவர் மீது விசாரணைகளைத் தொடங்கினர்.

இந்த நாட்டில் வங்காள தேசத் தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படுவதாகவும் அந்நியத் தொழிலாளர்களை அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் ஐரின் பெர்னாண்டஸ் கூறிக் கொண்டுள்ளது தொடர்பில்  ரேலா என்ற மக்கள் தொண்டர் அணியும் இரண்டு அரசு சாரா அமைப்புக்களும் அவருக்கு எதிராக போலீசில் அந்தப் புகாரைக் கொடுத்தன.

ஐரின் பெர்னாண்டஸ் செய்துள்ளதாக கூறப்படும் குற்றங்களை கண்டு பிடித்து அடுத்த நடவடிக்கை  பற்றி முடிவு செய்வதற்காக போலீசார் இப்போது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் அவருடைய அறிக்கைகளை ஆய்வு செய்வதாகவும் கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா கூறினார்.

“அது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழும் இருக்கலாம். என்றாலும் நாங்கள் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். வாக்குமூலம் கொடுக்குமாறு நாங்கள் அவரையும் அழைப்போம்,” என கூ கோலாலம்பூரில் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.

மலேசிய முதலாளிகள் சட்டத்தை மீறுவதாகவும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ரேலா அடிக்கடி அந்நியத் தொழிலாளர்களை மருட்டுவதாகவும் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் ஐரின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகாவின் அலுவலகம் நேற்றிரவு உடைக்கப்பட்டதாக கூறும் புகார் பற்றிக் குறிப்பிட்ட கூ, முற்பகல் 11 மணிக்குத்தான் போலீசாருக்கு புகார் கிடைத்ததாகச் சொன்னார்.

“நாங்கள் கைவிரல் ரேகைப் பதிவுகளை கண்டு பிடிக்க தடயவியல் குழு ஒன்றை அங்கு அனுப்புவோம். விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

பெர்னாமா