ஜொகூரில் ‘முள்ளிவாய்க்கால்’ 3-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் நாளை (19.05.2012) ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தின் தலைமையில் முள்ளிவாய்க்கால் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜொகூர்பாரு ஜோதிக் உள்ளரங்கத்தில் நாளை மாலை 7.30-க்கு 20 அரசு சார பொது இயக்கங்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்நினைவு நிகழ்வில், “ஒடுக்கப்பட்ட தேசிய விடுதலை போராட்டங்கள் – மீட்கப்படாத மனித அவலங்கள்” எனும் கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெறவுள்ளது.

இக்கருதரங்கத்தில் பேச்சாளர்களாக மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் தோழர் திருமாவளன் மற்றும் மலேசிய சோசலிச கட்சியின் அனைத்துலகப் பிரிவு பொறுப்பாளர் தோழர் ச்சூ சுன் காய் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

ஆக்கிரமிப்புக்கும் அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தவும் போரில் மடிந்த உறவுகளை நினைவுகூரவும் நீதியை நிலைநாட்டவும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் உள்ள தமிழ் ஈழ உணர்வாளர்கள் இதனை அழைப்பாக ஏற்று நினைவு நாள் நிகழ்வுக்கு வருமாறு அனைவரையும் செம்பருத்தி இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மேல் விவரங்களுக்கு : பூபதி – 0166604223

TAGS: