பர்ஹர்காரர்கள் குறைந்தது மூன்று சட்டங்களை மீறியுள்ளனர், எம்பி

பெர்சே 3.0 இன் இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் நடத்தப்பட்ட “பர்ஹர் எதிர்ப்பு” கடைகளை அனுமதிக்கும் சட்டம் எதனையும் தாம் காணவில்லை. மாறாக அந்நடவடிக்கைகளை குற்றமாக்கும் மூன்று சட்டங்கள் இருப்பதை தாம் கண்டதாக சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கூறினார்.

“தனிப்பட்ட ஒருவரின் வீட்டின்முன் தொல்லை விளைவிப்பத்தை அனுமதிக்கும் எந்த ஒரு சட்டத்தையும் வழக்குரைஞரான என்னால் காண முடியவில்லை”, என்று மே 10 இல் நடந்த பெர்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து அவர் கருத்துரைத்தார்.

லிம் மூன்று சட்டங்களைச் சுட்டிக் காட்டினார்:

1. Street, Drainage and Building Act, section 46, பொது இடங்களில் இடையூறுகள் வைப்பதைத் தடை செய்கிறது. மீறினால், முதல் குற்றத்திற்கு ரிம500 வரையில் அபராதம் விதிக்கப்படும்.

2. Road Transport Act, section 110, சுமுகமான போக்குவரத்துக்கு இடையூறு செய்தால், ரிம1,000 க்கு மேற்போகாத அபராதம்.

3. Local Government Act, section 80, பொது இடங்களில் ஏற்படும் இடையூறுகளை “அகற்ற, அடக்க மற்றும் குறைக்க” ஊராட்சிமன்றங்களை கட்டாயப்படுத்துகிறது.

இன்று பக்கத்தான் ரக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோலாலம்பூர் மேயர் அஹ்மட் புவாட் இஸ்மாயிலிடம் ஓர் ஆட்சேப மனுவை வழங்கிய பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் பேசினார்.

மேயரிடம் அந்த ஆட்சேப மனுவில் அரசு சார்பற்ற அமைப்பு இக்லாஸ் நடத்திய “பர்ஹர் எதிர்ப்பு” சட்டவிரோதமானதா, ஆம் என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்கப்பட்டுள்ளது.

லிம், செராஸ் எம்பி டான் கோக் வாய் (வலம்), தித்திவங்சா பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் சுஹாய்மி அப்துல் அசிஸ் அந்த ஆட்சேப மனுவை மேயரின் உதவியாளிடம் வழங்கினர்.

அவர்களுடன் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரின் அரசியல் செயலாளர் பஹாமி பாட்ஸில், எம்பி தெரசா கோவின் பிரதிநிதி கோங் காம் இன் ஆகியோரும் இருந்தனர்.

அந்நடத்தை அனுமதிக்கப்படுகிறது என்று மேயர் கூறுவாரேயானால், கோலாலம்பூர் “சட்டதிட்டங்களுக்கு உட்படாத நகர்” என்று மாற்றம் காணும். அப்போது அரசியல்வாதிகளும் பெருமக்களும் அவர்களின் வீட்டின்முன் கர்வத்துடன் கம்பீர நடைபோடுபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு சக்தியற்றவர்களாகி விடுவர் என்று லிம் மேலும் கூறினார்.

இருவிதமான நடைமுறைகள் இருக்கக்கூடாது என்று கூறிய பஹாமி, டத்தாரான் முற்றுகை ஆர்வலர்கள் வெளியேற்றப்பட்டதையும் “பர்ஹர் எதிர்ப்பாளர்கள்” அனுமதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெர்சே 3.0 மற்றும் டத்தாரான் முற்றுகை ஆகியவற்றை அதிகாரிகள் இடையூறுகள் என்று தீர்மானித்தது குறித்து கேட்டதற்கு, தேர்தல் சீர்திருத்தம் பற்றிய பேரணிக்கு போதுமான முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டதாக பஹாமி (இடம்) கூறினார்.

“பேரணி குறித்த அறிவிப்பும் அது நடந்த நாளுக்கும் இடையில் ஒரு மாதகால அவகாசம் இருந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் வியாபாரம் செய்வதற்கு அல்லது பேரணியில் கலந்துகொள்வதற்கு தங்களைத் தயார் செய்துகொள்வது ஒரு மாதகாலம் இருந்தது.

“அடுத்து, அம்பிகாவின் வீட்டுடன் ஒப்பிடுகையில் பெர்சே 3.0 நடந்தது பொது இடமாகும். அது தனிப்பட்டவர் மீதான தாக்குதலாகும், பெர்சே 3.0 அப்படியானதல்ல.”

துணை ஐஜிபியின் வீட்டின்முன் தோசைக் கடை போட வர்ஹாஅமான் முயன்றால், டிபிகேஎல் அதை “விரட்டியடிக்கலாமா” என்ற கேள்விக்கு, “அது துணைச் சட்டங்களுக்கு முரணானது என்றால், அவர்கள் சட்டத்தை நியாயமான முறையில் அமல்படுத்த வேண்டும்” என்று அவர் பதில் அளித்தார்.