தேசிய கல்விக் கொள்கை மறுசீரமைப்பு கலந்துரையாடல்: இந்தியர்களின் பங்கேற்பு குறைவு

மலேசிய கல்வி அமைச்சு அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தேசிய கல்வி செயல்திட்டம் வரைவதற்காக நாடு தழுவிய அளவில் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

பொதுமக்களின் கருத்துகளை அறிந்துகொள்வதற்காக தேசிய கல்விமன்ற ஆலோசகர் டாக்டர் வான் முகமட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு நடத்தும் கலந்துரையாடல்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் மக்களிடமிருந்து திரட்டப்படும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று டாக்டர் வான் முகமட் கூறியுள்ளார்.

இதுவரையில் கோலாலம்பூர், பேராக், பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் கலந்துரையாடல்கள் நடந்துள்ளன.

இக்கலந்துரையாடல்களில் அதிகமான மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களுடன் அவர்களுடைய இயக்கங்களும் பங்கேற்றுள்ளன. ஆனால், இந்தியர்களின் பங்கேற்பு மிகக் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்து வரும் கலந்துரையாடல்கள்:

1. நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா – ஜூன் 6;

2. சிலாங்கூர் – ஜூன் 9;

3. பினாங்கு – ஜூன் 16;

4. பகாங் – ஜூன் 23;

5. கிளந்தான் – ஜூன் 30;

6. திரெங்கானு – ஜூலை 2;

7. ஜோகூர் – ஜூலை 14.

இக்கலந்துரையாடல்களில் பொதுமக்கள் கலந்துகொள்வது அவசியம் என்று தமிழ் அறவாரியம் வலியுறுத்துகிறது.

கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கு பதிவு செய்துகொள்ள www.edureview.com என்ற இணையதளத்திற்குச் சென்று பங்கேற்க விரும்புகிறவரின் பெயர், மின் அஞ்சல், தொலைபேசி எண், பங்கேற்க விரும்பும் மாநிலம் மற்றும் பிரதிநித்துவம் போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், கலந்துரையாடல் ஏற்பாட்டாளர் பதிவு செய்து கொண்டுள்ளவர்களுடன் தொடர்பு கொள்வர்.

தேசிய கல்வி திட்டம் நம்முடைய எதிர்கால கல்வி முறையைத் தீர்மானிப்பதாகும். அது நமது எதிர்காலத் தலைமுறையினரின் கல்வி வாய்ப்புகளை நிர்ணயிக்கும் என்பதால் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்று நமது உரிமைகளை நிலைநாட்டுவது  அவசியமானதாகும் என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி வலியுறுத்தினார்.

கல்வியில் ஈடுபாடுள்ள அனைவரும் – பொதுமக்கள், இயக்கங்கள், கல்விமான்கள், சமூக சிந்தனையாளர்கள் – இக்கலந்துரையாடல்களில் பங்கேற்க முன்வர வேண்டும் என்றாரவர்.

இது சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் www.edureview.com என்ற இணையதளத்தில் ஆங்கிலத்திலும் மலாயிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தகவல் தேவைப்பட்டால் தமிழ் அறவாரியத்தின் அலுவலக தொலைபேசி எண் 03-26926533 ஐ அழைக்கலாம்.

இந்த வாய்ப்பைத் தவறவிட்டு பின்னால் ஓலமிட வேண்டாம் என்று பசுபதி கேட்டுக்கொண்டார்.

ஆதாரம்: தமிழ் நேசன் மே 18, 2012.