ஐரின் பெர்னாண்டஸ் சொல்வதை பிரிட்டிஷ் அரசு சாரா அமைப்பின் குடியேற்றத் தொழிலாளர் மீதான அறிக்கை ஒப்புக் கொள்கிறது

“விருப்பங்கள் மீது போர்” என்னும் தலைப்பில் லண்டனில் இயங்கும் அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை, மலேசியாவில் குடியேற்றத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாக தெனாகானித்தா தலைவர் ஐரின் பெர்ணாண்டஸ் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளதை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது.

பர்மாவைச் சேர்ந்த 30 குடியேற்ற பெண் தொழிலாளர்களைப் பேட்டி கண்ட அந்த அமைப்பு, மலேசியாவில் ஜவுளி, மின்னியல் தொழில்கள் ‘குடியேற்றத் தொழிலாளர்களுக்கான சட்டப்பூர்வ சம்பள, வேலை சூழ்நிலைத் தரங்களை அமலாக்குவதில் அலட்சியம் காட்டுகின்றன,” எனத் தெரிவித்தது.

கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் என்னும் தலைப்பைக் கொண்ட அறிக்கையில் அது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: “மலேசியா தாய்லாந்து, கம்போடியா ஆகியவற்றில் குடியேற்றத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் மோசமான சூழ்நிலைகளில் வசிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.”

“அந்த பெண்கள் வாரம் ஒன்றுக்கு 72 மணி நேரம் வரையில் வேலை செய்கின்றனர். ஆனால் மாதம் ஒன்றுக்கு- வேலைக்குத் தாமதமாக வந்தால் பிடிக்கப்படும் கட்டணம் உட்பட பல வகையான வரிகளை முதலாளிகள் கழித்த பின்னர்- 150 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.”

சம்பளங்களில் பெரும்பகுதி ஆள் சேர்க்கும் நிறுவனங்களுக்கு- மாதம் ஒன்றுக்கு தொழிலாளர் சம்பளங்களில் 300 ரிங்கிட் முதல் 400 ரிங்கிட் வரை- சென்று விடுகிறது. அதனால் பல தொழிலாளர்கள் பதிவு செய்யப்படாத குடியேற்றக்காரர்களாக மாறி விடுகின்றனர்.

“அதே வேளையில்  அடிடாஸ், ரீபோக், நைக் போன்ற அனைத்துலக மாதிரிகளுக்காக வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலைகள் முடிக்கப்பட்ட ஆடை அடிப்படையில் பணம் கொடுப்பதையும் அந்த பிரிட்டிஷ் அரசு சாரா அமைப்பு கண்டு பிடித்துள்ளது. அவ்வாறு செய்வதால் உள்நாட்டுத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது குடியேற்றத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம் பாதிக்கும் குறைவாக உள்ளது.”

அந்தத் தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதியின் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மாதம் ஒன்றுக்கு 8 ரிங்கிட் முதல் 10 ரிங்கிட் வரையில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த விடுதியில் மூன்று சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய அறையில் 17 பேர் வரையில் தங்க வைக்கப்படுகின்றனர் என்றும்  அந்த அமைப்பு குறிப்பிட்டது.

தான் பேட்டி கண்ட அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட்டுக்களை அல்லது வேலை அனுமதிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அதனால் சோதனைகள் நிகழும் போது அவர்கள் கைது செய்யப்படும் சாத்தியம் உள்ளது என்றும் அது தெரிவித்தது.

ஆள் திரட்டும் நிறுவனங்களுடன் சட்டப்பூர்வ உறவுகளை முதலாளிகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதால் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட வேலை வாய்ப்புச் சட்டத் திருத்தங்கள் ஊழியர்களின் உரிமைகளை மேலும் பறிக்கின்றன என்று அது மேலும் தெரிவித்தது.

பெர்லின் அரசு சாரா அமைப்பு அதே மாதிரி அறிக்கை விடுத்துள்ளது

“விருப்பங்கள் மீது போர்” என்ற அந்த அறிக்கை பெர்லினைத் தலைமையகமாகக் கொண்ட உலகப் பொருளாதார, சூழியல், மேம்பாட்டு நிறுவனம் மலேசிய மின்னியல் தொழில் துறை மீது 2010ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளைப் போன்று உள்ளது.

இதர பல விஷயங்களுடன் ஆள் சேர்க்கும் நிறுவனங்கள் கொண்டு வரும் தொழிலாளர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி மின்னியல் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படாமல் விபச்சாரத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதை அந்த ஜெர்மானிய அரசு சாரா அமைப்பு கண்டு பிடித்தது.

இதனிடையே குடியேற்றத் தொழிலாளர்கள் மீது அனைத்துலக ஊடகங்களுக்கு ஐரின் பெர்ணாண்டஸ் வழங்கிய அறிக்கைகள் தொடர்பில் தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் அவர் விசாரிக்கப்படலாம் என நேற்று கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா தகவல் வெளியிட்டிருந்தார்.