மசீச இன்னும் வேட்பாளர் பட்டியலை நஜிப்பிடம் கொடுக்கவில்லை

பிஎன் உறுப்புக் கட்சிகளில் இரண்டாவது பெரியதான மசீச அடுத்த பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை இறுதி முடிவு செய்து வருகிறது. இவ்வாறு அதன் தலைமைச் செயலாளர் கோங் சோ ஹா கூறுகிறார்.

வரும் தேர்தலில் போட்டியிட பல புது முகங்களை அடையாளம் கண்டுள்ளது என்றார் அவர். ஆனால் அவர்களை கோங் அடையாளம் காட்டவில்லை.

விரைவில் மசீச வேட்பாளர் பட்டியல் பிஎன் உயர் நிலைத் தலைமைத்துவத்திற்கு வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

“எந்தத் தேர்தலிலும் நிச்சயமாக புது வேட்பாளர்கள் இருப்பார்கள். நாங்கள் ஏற்கனவே பட்டியலைத் தயாரித்து விட்டோம். தேர்தல் நெருங்க நெருங்க நாங்கள் அதனை புதுப்பிப்போம்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட சில வேட்பாளர்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு இந்த முறையும் வேட்பாளர்களாக நிறுத்தப்படும் சாத்தியத்தையும் அவர் நிராகரிக்கவில்லை. என்றாலும் இறுதி முடிவு கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கையும் பிஎன் உயர் தலைமைத்துவத்தையும் பொறுத்துள்ளது என்றார் அவர்.

“அவர்கள் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்கள் என்றும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் என்றும் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்றும் தெரிந்தால் அவர்கள் ஏன் பரிசீலிக்கக் கூடாது ?”

மசீச-வுக்கு அடுத்த தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் வழங்கப்படும் என கருதப்படுகிறது. அதில் 25 இடங்களில் அது வெற்றி பெறும் சாத்தியம் உள்ளது.
   
2008 தேர்தலில் மசீச 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2004ம் ஆண்டுஅது தான் போட்டியிட்ட 40 இடங்களில் 31ஐ பிடித்தது.

பெர்னாமா