கோமாளி, ம.இ.கா. மீண்டும் தலையெடுக்குமா?

வேலுச்சாமி: கோமாளி, ம.இ.கா. மீண்டும் தலையெடுக்குமா? நான் இப்பதான் அங்கத்தினராக சேர்ந்தேன், எதிர்காலத்தில் மஇகா தேசிய தலைவராக ஆசையுள்ளது? கிளி சோதிடம் பார்த்தேன், பத்தரகாளி படம் வந்தது, ஆட்டிப்படைக்கும் ஆற்றல் உள்ளதாக சொன்னான்.

கோமாளி: கிளி சோதிடன் உனது பேரை தலைக்கீழாக பார்த்து 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் சொன்னதை இப்போ உனக்கு சொல்கிறான். தேசியவாதக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டது மஇகா. ஆனால், இந்திய – சீன சமூகங்களின் மொழி, பண்பாட்டுக் கூறுகளை பாதுகாக்கும் பொருட்டு மஇகா மற்றும் மசீச போன்றவை இனவாத கட்சிகளாக அம்னோவுடன் இணைந்து செயல்பட்டன. நாளடைவில் அம்னோவுக்கு ஆதரவு நல்கும் இந்தியர் மற்றும் சீனர் தலைவர்கள் மட்டுமே கூட்டுக் கட்சியான தேசிய முன்னணியில் பெயர் போட அனுமதிக்கப்பட்டது. அம்னோவுக்கு எதிரானவர்கள் எதிர்கட்சியான டிஏபி, பிபிபி, கெராக்கான், தொழிலாளர் கட்சி போன்றவற்றில் சேர்ந்தனர்.

அம்னோவால் உண்டாக்கப்பட்ட கொள்கைகள் சீனர்களையும் இந்தியர்களையும் வெகுவாக பாதித்தன. அதேவேளை அம்னோவின் இறுக்கம் மலாய்க்காரர் அல்லாதவர்களை நாட்டின் இரண்டாம்தர குடிமக்கள் என்ற நிலைக்கு, அதன் 50 ஆண்டுகால ஆட்சி கொண்டு வந்தது. அதோடு நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பில் அம்னோவில் கட்டுபாடு வேரூன்றியது. ஒட்டுமொத்தத்தில் எல்லாமே அம்னோதான்.

வெறுப்படைந்த நாட்டு மக்கள் இன்று புதிய அரசியல் வியூகங்களில் பங்கு கொள்கிறார்கள். வேறு வழியும் கிடையாது. நாடு மக்களுடையது, அது அம்னோவுடையது அல்ல என்பதே இன்று குரலாக உள்ளது.

அம்னோவின் ஆட்சியில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் அரசியல் கட்சிகள், சொன்னதை செய்யும் வளர்ப்பு பிராணிகள் போலத்தான் இயங்க வேண்டும்.

ஆட்டுமந்தைகளை மேயவிட்டு அழைத்து வரும் நாய்களைப்போல் தேர்தல் காலங்களில் இந்த அடிமை அரசியல்வாதிகள் தங்கள் இனங்களின் ஓட்டுகளை சேகரித்து கொடுக்க வேண்டும்.

இன்று நாய்களாக பலர் அலைகிறார்கள். ஆனால், ஆடுகளைத்தான் அதிகம் காணவில்லை.

வேலுச்சாமி, நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் தேசியத்தலைவராக முடியும். உங்கள் இனத்தைக் கண்டு குரைப்பதற்கும் வாலாட்டு வதற்கும் கொஞ்சம் பயிற்சி தேவை. அவ்வளவுதான்.