குவாந்தானில் சீன உயர்நிலைப் பள்ளிக்கூடம் கோரி 5,000 பேர் பேரணி

பாகாங் தலைநகர் குவாந்தானில் தனியார் சீன சுயேச்சை உயர் நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி 5,000க்கும் மேற்பட்ட மக்கள் குவாந்தானில் அமைதியாக கூட்டம் நடத்தியுள்ளனர்.

பெரும்பாலும் சிவப்பு நிற உடை அணிந்திருந்த அவர்கள், பிகே4 திடலில் ஒன்று கூடினர். சீன கல்வி மேம்பாட்டுக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் தயாரித்த தோரணங்கள் கூடாரங்களை அலங்கரித்தன.

ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்வை பாகாங் மாநில சீனப் பள்ளிக்கூட நிர்வாக சம்மேளன வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.

கோலாலம்பூரில் உள்ள சொங் ஹுவா தனியார் உயர்நிலைப் பள்ளியின் கிளையை குவாந்தானில் அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் பொருட்டு அந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

அந்த சம்மேளனத்தின் தலைவர் லிம் சின் சீ, மலேசிய சீனர் சங்க சம்மேளனத் தலைவர் பெங் யின் ஹுவா, டொங் ஜோங் தலைவர் யாப் சின் தியான் ஆகியோர் அந்த நிகழ்வில் பேசினார்கள்.

இரண்டு தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. குவாந்தானில் சீன சுயேச்சை உயர்நிலைப் பள்ளிக்கூடத்தை அமைப்பதற்கு முழு ஆதரவு தெரிவிப்பது, அந்தப் பள்ளிக்கூடத்தை அங்கீகரிப்பதின் மூலம் அரசாங்கம் மக்களுக்குச் செவி சாய்க்க வேண்டும் என கேட்டுக் கொள்வது ஆகியவை அந்தத் தீர்மானங்களாகும்.

அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை

பாகாங் மாநிலத்தில் சீனத் தொடக்கப்பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தொடர்ந்து கல்வி கற்க விரும்பினால் மற்ற மாநிலங்களில் இயங்கும் சீன சுயேச்சை உயர்நிலைப் பள்ளிகளில் சேர வேண்டியுள்ளதாக சீன கல்வி அமைப்புக்கள் கூறுகின்றன.

குவாந்தான் சொங் ஹுவா சுயேச்சை உயர்நிலைப் பள்ளியை மீண்டும் திறப்பதற்கு பாகாங் மாநில சீனப் பள்ளிக்கூட நிர்வாக சம்மேளன வாரியம் 1986ம் ஆண்டு முதல் போராடி வருகிறது. ஆனால் 26 ஆண்டுகள் முடிந்தும் அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதிலும் அதற்குக் கிடைக்கவில்லை.

கோலாலம்பூரில் உள்ள சொங் ஹுவா உயர்நிலைப் பள்ளியின் கிளையை குவாந்தானில் அமைக்கலாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2010ம் ஆண்டு ஜுலை மாதம் யோசனை கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட விண்ணப்பத்துக்கும் இது வரை கல்வி அமைச்சு பதில் அளிக்கவே இல்லை.

பிரதமரிடமும் கல்வி அமைச்சர் முஹைடின் யாசினிடமும் அந்த மனுக்கள் கொடுக்கப்படும் என யாப் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக அந்த விண்ணப்பத்தை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூட்டத்தினர் விரும்புகின்றனர்.