பிஎன் தவறு செய்தால் நிராகரியுங்கள்: மசீச தலைவி

ஏப்ரல் 28-இல் மலாக்கா பெர்சே 3.0பேரணியில் கலந்துகொண்டதற்காகக் கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்ட மலாக்கா மசீச மகளிர் தலைவி கியான் சிட் ஹார், பிஎன் தவறு செய்யும்போது கட்சி அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

“இப்போதெல்லாம் நடுநிலைமை வகிப்பது முடியாது.சரியா, தப்பா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

“கட்சிக்கென்று ஒரு நிலைப்பாடு இருக்கும்.ஆனால், நாம் நீதியின் பக்கம்தான் நிற்க வேண்டும்.பிஎன்-னோ மசீச-வோ தப்பு செய்தால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது.

“தப்பு என்று தெரிந்தால் அதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.சரி என்றால் சரி, தப்பு என்றால் தப்பு;(தட்டிக் கேட்க)அஞ்சக்கூடாது”. கடந்த வாரம் அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில் மலேசியாகினியிடம் கியான் இவ்வாறு கூறினார்.

அந்த 73-வயது முன்னாள் செனட்டர், முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்  போலீஸ் ஹனிப் ஒமார் கோலாலம்பூரில் பெர்சே 3.0 பேரணி வன்செயல் பற்றி விசாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டது தமக்கும்கூட பிடிக்கவில்லைதான் என்றார்.

“பெர்சே அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்று கூறிய அவரை எப்படி விசாரணைக் குழுவில் சேர்த்துக்கொள்ளலாம்?

“பெர்சே பேரணியில் கலந்துகொண்ட நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க எண்ணியதே இல்லை.”

மசீச அம்னோவுக்கு அடிபணிந்துபோவதாகக் கூறப்படுவதை “உண்மை” என்கிறார் கியான்.இதனால் இளம் மலேசியர்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றாரவர்.

55ஆண்டுகள் மசீசவில் இருப்பதாகக் கூறிய கியான், குறைகூறல்களைக் கேட்டுக் கட்சி ஆத்திரமடையக்கூடாது. அவற்றை ஆராய வேண்டும் என்றார்.

“என் விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தம் பதவி விலகச் சொல்கிறார். நான் மசீச உறுப்பினர். என்னைப் பதவி விலகச் சொல்ல (அம்னோ) முதலமைச்சருக்கு என்ன உரிமை இருக்கிறது?”

தம்மைத் தற்காத்துப்பேச தம் கட்சித் தலைவர் முன்வராதது அவருக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்துள்ளது.

“என் தலைவர் எனக்காக வாதாடவில்லை;முதலமைச்சார் சொல்வதைத்தான் கேட்கிறார்.(ஆதரவு)குறைகிறது குறைகிறது என்றால் அதற்கு இதுதான் காரணம்.”

ஆனால், மசீச மகளிர் பகுதியினர் தமக்கு ஆதரவாக உள்ளனர் என்றாரவர்.

கியான் மஞ்சள் உடை தரித்து மலாக்கா பெர்சே பேரணியில் முதல் வரிசையில் நிற்பதைக் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளிவந்ததை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று முகம்மட் அறைகூவினார்.

அவருடன் சேர்ந்துகொண்டு தலைவர் சுவாவும் கியானைக் கண்டித்தார்.இவ்வளவுக்கும் சுவா,
மசீச உறுப்பினர்கள் பெர்சே பேரணியில்  கலந்துகொள்ளலாம் என்று தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கியானுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறிய சுவா அவருக்கு வயதாகிவிட்டது, இனி அவரால் கட்சிக்கு ஆக்கப்பூர்வமான முறையில் பங்காற்ற முடியாது என்றார்.அப்படி எதுவும் செய்தால் அது கியானை ஒரு தியாகி ஆக்கிவிடும் என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம்.

மக்களுக்குச் சேவை செய்வோர்தான் அரசியல்வாதிகள்

பெர்சே 3.0பேரணியில் தாம் கலந்துகொண்டதைத் தற்காத்துப்பேசினார் கியான். தேர்தல்கள் ஒழுங்காக நடத்தப்பட வேண்டும் என்பதையும்,லினாஸ் அரிய மண் ஆலைக்கு எதிரான இயக்கத்தையும் மசீச ஆதரித்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் தம் செயலை எண்ணிப் பெருமை அடைவதாகக் கூறினார்.

தேர்தல் நடைமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று வினவியதற்குப் பின்வருமாறு பதிலளித்தார்: “மலாக்காவில் இப்படி நடப்பதுண்டு- வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் யார் என்பது ஓரளவு தெரியவரும்போது போலீஸ் அல்லது இராணுவத்திலிருந்து வாக்குப்பெட்டி ஒன்று திடீரென்று வந்து சேரும்.

“எனக்கு இது நியாயமாகத் தெரியவில்லை.எல்லா வாக்குப் பெட்டிகளும் ஒன்றாகத்தான் கொண்டுவரப்பட வேண்டும்.அப்புறம், செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளதைப்போல், ஒரு வீட்டில் சில நூறு வாக்காளர்கள் இருப்பது எப்படி?

“தேர்தலில் வெற்றிபெற என்னவெல்லாமோ செய்கிறார்கள்.

“ஆனால், இக்காலத்தில் அது எளிதல்ல.மக்களோடு மக்களாக நின்று கடுமையாக உழைக்க வேண்டும்,அப்போதுதான் தேர்தலில் (நியாயமாக) வெற்றிபெற முடியும்.

“நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் ஒரு ஜனநாயக நாடு.இம்முறை மாற்றரசுக் கட்சி வெற்றிபெற்று அது நல்லமுறையில் செயல்படவில்லை என்றால் அடுத்த தேர்தலில் பதவி இறக்கப்படும்.

“மாற்றரசுக் கட்சியோ ஆளும்கட்சியோ, எமது (அரசியல்வாதிகள்) கடமை மக்களுக்குச் சேவை செய்வதுதான்”, என்று கியான் குறிப்பிட்டார்.