மலாக்கா மெர்லிமாவில் நடைபெற்ற வாக்காளர் கல்வி இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் குறித்து இஸ்லாமிய சமயத் தலைவர்கள் மௌனம் சாதிப்பது குறித்து தாராளப் போக்குடைய, அரசு சாரா முஸ்லிம் அமைப்பு ஒன்று ஆத்திரம் அடைந்துள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணிக்கு எதிராக “பல முப்திக்கள்” கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இயக்கத்தில் பங்கு கொண்ட பேராளர்கள் மீது முட்டைகளையும் கற்களையும் வீசிய ரௌடிக் கும்பலின் நடவடிக்கை பற்றி அமைதியாக இருப்பதாக ஐஆர்எப் எனப்படும் இஸ்லாமிய எழுச்சி முன்னணியின் தலைவர் அகமட் பாரூக் மூசா கூறினார்.
“தாங்களாகவே முன் வந்து பெர்சே பேரணிக்கு எதிராகப் பேசிய மலேசியாவின் பல முப்திக்கள் மெர்லிமாவ் கலவரத்துக்கு எதிராகவும் பேச முன் வருவார்களா ?”
“பேச்சுச் சுதந்திரத்துக்கான வரம்புகள், இஸ்லாத்தில் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி நிறையப் பேசிய அந்த முப்திக்களிடமிருந்து நாம் எதனையும் செவிமடுக்கவில்லை,” என அகமட் பாரூக் சொன்னார்.
“அந்த மெர்லிமாவ் கலகக்காரர்கள் பின்பற்றும் இனவாதக் கொள்கைகள் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சி ஒன்றுடன் உள்ள பிணைப்பு ஆகியவை காரணமாக நன்னடத்தை விதிமுறைகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா ?”
ஆளும் அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் அடிக்கடி அமலாக்கும் வியூகங்களாக வன்முறையும் அச்சுறுத்தலும் மாறி வருவதை சுட்டிக் காட்டிய அவர், அந்தத் தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டித்தார்.
பெர்சே இயக்கம், அரசாங்கக் கொள்கைகள் மீது கருத்துத் தெரிவிப்பதற்கு உள்ள ஜனநாயகம் உரிமையைப் பிரதிபலிக்கிறது என்றார் அகமட் பாரூக்.
அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்ட போலீஸ்காரர்கள் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.
“கட்சிச் சார்பு நிலையை கருத்தில் கொள்ளாமல் எல்லா குடிமக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களுடைய கடமை அல்லவா ?” என அவர் வினவினார்.
அந்தத் தாக்குதல்கள் “ஜனநாயக எதிர்ப்பை முறியடிப்பதற்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள்” என்றும் அகமட் பாரூக் சொன்னார். தேர்தல் சீர்திருத்தத்திற்கான பெர்சே கோரிக்கைகளின் அமலாக்கம் பணயம் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கருதுகிறார்.
மெர்லிமாவில் நிகழ்ந்தது- அதற்கு முன்பு பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி, சாதாரண மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இனவாத அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் ஆகியவை இனவாதிகளினால் தூண்டப்பட்ட குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்றார் அகமட் பாரூக் .

























