நஜிப்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஃபோர்பஸ் பாராட்டு

உலகின் முன்னணி வணிக இதழான ஃபோர்பஸின் தலைவர், புதிய பொருளாதார வடிவத்தின்(என்இஎம்)கீழ் நாட்டைச் சீரமைக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின்  முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

“ஈராண்டுகளுக்குமுன் பிரதமர் பதவியேற்ற புதிதில் நல்ல விசயங்களைச் சொன்னார்.இன்று அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறார்”, என்று அமெரிக்கக் கோடீஸ்வரரும், பதிப்பாளருமான ஸ்டீவ் ஃபோர்பஸ் கூறினார். 

“பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதற்குத் தடையாக இருக்கக்கூடிய உதவித் தொகைகள், வரிகள் போன்றவற்றுக்கும் முதலீட்டுக்குத் தடையாக இருக்கக்கூடியவற்றுக்கும்  தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

“அரசாங்கம்தான் அவ்வாறு கூறுகின்றது என்பதில்லை, வெளியில் உள்ளவர்களும் அதைப் பார்க்கவே செய்கிறார்கள்”, என்று ஃபோர்பஸ் கூறினார்.

இன்று கோலாலம்பூரில்,மூன்று-நாள் ஃபோர்பஸ் குளோபல் சிஇஓ (Forbes Global CEO)மாநாட்டின் தொடக்கவிழாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அச்செய்தியாளர் கூட்டத்தில் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்டும் ஃபோர்பஸ் ஆசியா தலைவர் வில்லியம் அடாமோபோல்ஸும் கலந்துகொண்டனர்.

நாட்டின் சமுதாய சீரமைப்புக் கொள்கை பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு, அரசாங்கத்தின் நடப்புச் சீரமைப்புகள் சரியானபடி செயல்பட அது அத்தியாவசியமானது என்று ஃபோர்பஸ் குறிப்பிட்டார்.

“அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக மாறும் இலக்கை அடைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்வது அவசியம்”, என்றாரவர்.

என்இஎம் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நோக்கத்தைக் கொண்டது என்று முஸ்தபா கூறினார். அந்த வகையில் சமுதாய சீரமைப்புக்கும் அதில் முக்கிய இடமுண்டு.

“சமுதாய சீரமைப்பு  நடவடிக்கையைச் செயல்படுத்துவதில் தகுதி-அடிப்படை என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது”, என்று முஸ்தபா கூறினார்.

நாட்டின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதற்காக,பல துறைகளில் 30விழுக்காட்டு பங்கு பூமிபுத்ராக்களுக்கு என்ற ஒதுக்கீட்டை நஜிப் கைவிட்டிருக்கிறார்.

மலேசியாவில் குறைபாடுகள் உள்ளன என்றாலும் அவற்றுக்குத் தீர்வுகாண அரசாங்கம் முயன்று வருவதை ஃபோர்பஸ் பாராட்டினார்.

இவ்வாண்டு ஃபோர்பஸ் மாநாடு ‘முக்கிய முடிவெடுக்கும் தருணத்தில்’ என்னும் கருப்பொருளில் நடக்கிறது. உலக முழுவதிலிமிருந்தும் ரிம100 பில்லியனுக்கும் மேல் பெறுமதியுள்ள சொத்துக்களைக் கொண்ட சுமார் 400 தொழில் அதிபர்கள் அதில் கலந்துகொள்ள கோலாலம்பூர் வந்துள்ளனர்.

நாளை, நஜிப் அம்மாநாட்டில் கலந்துகொண்டு ஃபோர்பஸுடனும் மற்ற தொழிலதிபர்களுடனும் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.