டிஏபி உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்டதை மலாக்கா பெர்க்காசா கண்டிக்கிறது

மெர்லிமாவில் நேற்று நிகழ்ந்த பெர்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தனது 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டதை மலாக்கா பெர்க்காசா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் கலவரத்தில் ஈடுபடுமாறு தான் அவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கவில்லை என அது கூறியது.

“கார்களை சேதப்படுத்துமாறோ அல்லது அழிவு வேலைகளில் ஈடுபடுமாறோ நாங்கள் ஆணையிடவே இல்லை. நாங்கள் அமைதியாகக் கூடினோம். நாங்கள் அமைதியைப் பாராட்டுகிறோம்,” என அதன் தலைவர் அப்துல் ரஹிம் ஒஸ்மான் கூறினார்.

உண்மையில் அந்த இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது முட்டைகளும் கற்களும் வீசப்பட்டதையும் அந்த வலச்சாரி அரசு சாரா மலாய் அமைப்பு கண்டிக்கிறது. அவர்களுடைய கார்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களை ‘கிரிமினல் மற்றும் காயப்படுத்தும்’ நடவடிக்கைகள் என   அது வருணித்தது.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்காக நேற்று தேநீர் விருந்து நடத்தப்பட்ட இடத்துக்கு அருகில் அரசாங்க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறி அந்த பெர்சே நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன.

அந்தச் சம்பவத்தில் நிகழ்வு முடிந்து புறப்பட்டுக் கொண்டிருந்த, டிஏபி-யைச் சேர்ந்த  ஆயர் குரோ சட்டமன்ற உறுப்பினர் கூ போய் தியோங், பண்டார் ஹிலிர் சட்டமன்ற உறுப்பினர் தே கோக் கியூ ஆகியோர் மீது முட்டைகள் வீசப்பட்டன.

“நான் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் இந்த வகையில்அல்ல. நாம் முதிர்ச்சி அடைந்தவர்கள். இது போன்று நிகழவே கூடாது,” என்றார் ரஹிம்.

அந்தச் சம்பவத்தில் தே-யின் கார் கண்ணடி நொறுங்கியது. பல இடங்கள் நசுங்கியுள்ளன. அத்துடன் அதன் முன் டயரும் சேதமடைந்துள்ளது. தே அது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்.

அன்றைய தினம் பெர்சே தேநீர் விருந்து நிகழ்வில் தனது உறுப்பினர்கள் குழப்பத்தை மூட்டியதாக சொல்லப்படுவதை ஜாசின் அம்னோ இளைஞர் பிரிவு மறுத்துள்ளது.

 

TAGS: