கூட்டரசுத் தலைநகரில் நிகழ்ந்த பொதுப் பேரணியில் மொத்தம் பங்கு கொண்டவர் எண்ணிக்கை 22,270 ஆகும். எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதைப் போல நூறாயிரக்கணக்கானவர் அல்ல என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.
பெர்னாமா என்ற மலேசிய தேசிய செய்தி நிறுவனம் படத் தொகுப்பு முறையைப் (photographic blocking system) பயன்படுத்தி அந்த ஏப்ரல் 28 பேரணியில் பங்கு கொண்டவர் எண்ணிக்கையை முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
“அந்த எண்ணிக்கை 22,270 ஆகும். அது கிட்டத்தட்ட பிபிசி தெரிவித்த 25,000 என்ற புள்ளி விவரத்துக்கு அணுக்கமாக வருகிறது. நிச்சயமாக அந்த எண்ணிக்கை உலகில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு பிகேஆர் ஆலோசகரும் எதிர்த்தரப்புத் தலைவருமான அன்வார் இப்ராஹிம் கூறியது போல அல்ல.”
“அந்த வகையில் நாங்கள் இதனைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்: எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளும் கூட்டத்தினர் எண்ணிக்கையை குறிப்பிடும் போது உண்மையைச் சொல்லுங்கள்.”
“அந்த எண்ணிக்கை நூறாயிரக்கணக்காக இருக்கும் என்று கூறுவது ஒரளவு குறும்புத்தனமானது என்பதோடு மலேசியர்களுக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் தவறான தகவல்களைக் கொடுப்பதற்கு ஒப்பாகும்,” என ராயிஸ், முபாராக் என அழைக்கப்படும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களுக்கான மலேசிய மன்றத்தின் உறுப்பினர்களுக்கும் அம்னோ மூத்த உறுப்பினர்களுக்கும் புதிய ஊடகங்கள் மீதான் அடிப்படைப் பயிற்சியைத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.
அந்த எண்ணிக்கை எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பதை அறிய விரும்புவோர், பெர்னாமா அதனைச் செய்ததைப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
“நாங்கள் உண்மையில் படத்தில் ஒவ்வொரு செண்டி மீட்டருக்கும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை நாங்கள் எண்ணினோம்.”
“நாங்கள் இது போன்ற மதிப்பீடுகளையே ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம். பிகேஆர் தரப்பு வழங்கும் கவர்ச்சிகரமான எண்ணிக்கையை அல்ல,” என்றார் அவர்.
அது தான் அரசின் அதிகாரத்துவப் புள்ளி விவரமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ராயிஸ், பெர்னாமா பொருத்தமான நம்பக் கூடிய பிபிசி கொடுத்த மதிப்பீட்டுக்கு அணுக்கமான எண்ணிக்கையை அளித்துள்ளது என்றார்.
யாருக்காவது அக்கறை இருந்தால் சுயேச்சையான அமைப்பு ஒன்று அதனை உறுதி செய்ய வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் ராயிஸ் குறிப்பிட்டார். எதிர்காலத்துக்கு அது அளவுகோலாகவும் விளங்க முடியும்.
“பெரிய கூட்டம் நிகழும் ஒவ்வொரு முறையும் அந்த முறையை பயன்படுத்த வேண்டும் என நான் யோசனை கூறுவேன். அதன் வழி கூட்ட அளவு குறித்து நியாயமான மதிப்பீட்டை பொது மக்கள் பெற முடியும்,” என்றார் அவர்.
பெர்னாமா