அரசாங்கம்தான் நன்னெறியற்றது, ஐரின் சாடினார்

தம்மைப்போன்ற மனித உரிமை போராட்டவாதிகளை சட்டத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் அரசாங்கம்தான் “நன்னெறியற்றது” என்று தெனகாநித்தாவின் செயல்முறை இயக்குனர் ஐரின் பெர்னாண்டஸ் அரசாங்கத்தைச் சாடினார்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைத்து விட்டார் என்று ஐரினை குற்றச்சாட்டிய துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரை “நன்னெறியற்ற” ஆர்வலர் என்று வர்ணித்திருந்தார்.

“அச்சுறுத்தல் மற்றும் குறைகூறல்களை பாங்கான முறையில் ஏற்க மறுப்பது நன்னெறியற்றதாகும். அதனைச் செய்பவர் யாரேனும் உண்டு என்றால், அது (முகைதின்) மற்றும் அரசாங்கம். அவர்கள் நன்னெறியற்றவர்கள்”, என்று ஐரின் சாடினார்.

தம்மை வேட்டையாடுவதற்குப் பதில்  தெனகாநித்தாவும் வெளிநாட்டு தொழிலாளர்களும் செய்துள்ள ஏராளமான புகார்களை விசாரிப்பதன் மூலம் அதிகாரத்தினர் “தங்களுடைய வேலையச் செய்ய வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம், மலேசியாவிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றி அனைத்துலக ஊடகத்திடம் ஐரின் விடுத்திருந்த அறிக்கைகள் மீது அவர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படலாம் என்று கோலாலம்பூர் கிரிமினல் புலனாய்வுத்துறை தலைவர் கூ சின் வா கூறியிருந்தார்.