மசீச: பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அடைந்தது படுவீழ்ச்சி

சிலாங்கூர், மலேசியாவில் மிகவும்  வளர்ச்சிகண்ட மாநிலம் என்ற  நிலையிலிருந்து வளர்ச்சிக்குன்றிய மாநிலம் ஆகிவிட்டதாம். சிலாங்கூர் மசீச கூறுகிறது.

குப்பை அள்ளும் விவகாரம், காஜாங், கிள்ளான் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் சிலாங்கூர் குடிமக்கள் எதிர்நோக்கும் பல விவகாரங்கள்  ஆகியவை இந்நிலைக்குக் காரணங்களாகும் என்கிறார் மாநில மசீச செயலாளர் வொங் குன் முன்.

மே மாதம்வரை அம்மாநிலத்தில் 4,750பேருக்கு டிங்கிக் காய்ச்சல் கண்டிருப்பதாக சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் காண்பிப்பதாகக் கூறிய அவர், இது தேசிய அளவில் அந்நோய்க்கு ஆளானவர் எண்ணிக்கையில் சரிபாதியாகும் என்றார்.

இதன் தொடர்பில் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்,  டாக்டர் சேவியர்  ஜெயகுமாரைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான வொங்  வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மக்களின் நலன் காப்பது முக்கியம் என்றாரவர். சேவியர் ஜெயகுமார், மாநிலச் சுகாதாரக் குழுத் தலைவராவார்.

குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாததும் வெள்ளப் பெருக்குகளும்கூட டிங்கி பரவுவதற்குக் காரணங்களாகும் என்பதால், டிங்கிக் காய்ச்சல் பரவலுக்கு, ஊராட்சிக்குப் பொறுப்பாகவுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியுவும் பொறுப்பேற்க வேண்டும்.

“கடந்த ஐந்து மாதங்களில் 20பேர் டிங்கிக் காய்ச்சலுக்குப் பலியானதாக சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் பார்க்கும்போது சிலாங்கூரில் மாதம் இருவர் அந்நோய்க்குப் பலியாகிறார்கள்.

“இது அவசரமாகக் கவனிக்க வேண்டிய விசயமாகும். ஆனால் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாவற்றுக்கும் முந்தைய அரசையே குற்றம் சொல்வதிலும் வாக்குகள் தேடுவதிலும்தான் குறியாக இருக்கிறார்கள்”, என்றாரவர்.

வெளிப்படைத்தன்மை இல்லை

குப்பை அள்ளும் குத்தகைகள் “ஒளிவுமறைவாக” வழங்குப்படுவதாக வொங் கூறினார். அதன் விளைவாக அனுபவமில்லாதவர்களுக்கும் போதுமான தளவாடங்களை வைத்திராதவர்களுக்கும் குப்பை அள்ளும் குத்தகைகள் வழங்கப்படுகின்றன.

“அரசு வெளிப்படையாக நடந்துகொள்வதாக இருந்தால், அந்த நிறுவனங்களின் பின்னணியை மக்களுக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.ஆனால்,குத்தகையாளர்களின் நியமனங்கள் வெளியில் தெரியாமல் நடந்தன.

“அதன் விளைவாக அனுபவமற்றவர்களும் தகுதியற்றவர்களும் போதுமான கருவிகளைப் பெற்றிராதவர்களும் குத்தகையாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்”.

இதற்கெல்லாம் சிலாங்கூரின் வரி செலுத்துவோரிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப்பிட்ட வொங், சில நிறுவனங்களிடம் குப்பை அள்ளும் வாகனங்கள்கூட இல்லை என்றார்.

இதனிடையே, ஜெயகுமார் சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களுக்கும் குப்பை அள்ளுதலுக்கும் தொடர்பில்லை என்றார்.

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள், கவனிப்பாரற்றுக் கிடக்கும் கட்டிடங்கள், பள்ளி வளாகங்கள், அரசாங்கக் கட்டிடங்கள் போன்றவதாம் ஏடிஸ் கொசுக்கள் வளருமிடங்களாகும் என்றாரவர்.

சுகாதார அமைச்சு இவ் விவகாரத்தை அரசியலாக்காமல் அதன் பொது அறிவிப்புகளில் கண்ணியம் காக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.