பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுப்புச் செய்யும் முயற்சி

மலாக்கா, மெர்லிமாவில், பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கலந்துகொள்ளவிருந்த ஒரு நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசியெறியப்பட்டது பெர்காசாவையும் அம்னோவையும் கீழறுக்க சில தரப்புகள் மேற்கொண்ட முயற்சியாகும் என்கிறார் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி.

“அது ஒரு கீழறுப்புச் செயல்…..பெர்காசாவின் பெயரைக் கெடுக்க முயற்சிகள் நடக்கின்றன”, என்று  இப்ராகிம் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்துக்குப் பின்னர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்நிகழ்வின்போது பெர்காசா உறுப்பினர்களும் அங்கிருந்ததை இப்ராகிம் மறுக்கவில்லை.ஆனால், மலாய் உரிமைகளுக்காக போராடும் அந்த அமைப்பு அப்படிப்பட்ட வன்செயல்களை ஆதரிப்பதில்லை என்றார்.

“சில வேளைகளில், சிலர் பெர்காசா டி-சட்டைகள் அல்லது சீருடைகளை வாங்கி அணிந்துகொள்கிறார்கள்.அதன்பின் ஏதாவது நிகழ்ந்தால் மக்கள் எங்களைக் குறை சொல்கிறார்கள்”, என்றார்.

“அந்தக் கீழறுப்புச் செயல்களை” யார்தான் செய்திருப்பார்கள் என்று வினவியதற்கு, “எனக்குத் தெரியவில்லை,அரசியல் காரணத்துக்காக செய்திருக்கலாம்”, என்று இப்ராகிம் கூறினார்.

அந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தங்கள் உறுப்பினர்கள் அங்கிருந்ததை அம்னோவும் பெர்காசாவும் ஒப்புக்கொண்டன. ஆனால், அங்கு மூண்ட வன்செயல்களுக்கு அவைதாம்  காரணம் என்று கூறப்படுவதை மறுத்தன.

கடந்த சனிக்கிழமை அம்பிகா கலந்துகொள்ளவிருந்த அந்நிகழ்வுக்கு மலாக்கா பாஸ் ஏற்பாடு செய்திருந்தது. பெர்சே இணைத் தலைவரான அம்பிகாவுக்கு  எதிர்ப்புத் தெரிவிப்பதற்கென்றே சுமார் 200 பேர் அங்கு திரண்டனர்.

அந்நிகழ்வில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூ போய் தியோங், தே கொக் கியு ஆகியோர்மீது முட்டைகளும் கற்களும் வீசியெறியப்பட்டன.அந்த அமளியில் சில வாகனங்களும் சேதமடைந்தன.காரின் கண்ணாடி ஒன்று உடைந்தது.

அம்பிகாவின் பாதுகாப்பை உத்தேசித்து அந்நிகழ்வுக்கு வர வேண்டாம் என்று ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே அவருக்கு செய்தி தெரிவித்து விட்டனர்.

கார் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை மோதித் தள்ளியதை அடுத்து அந்நிகழ்வில் குழப்பம் விளைந்ததாக ஜாசின் அம்னோ இளைஞர் தலைவர் ஜீசல் டிட் கூறினார். ஆனால், கூவும் தே-யும் அதை மறுத்தனர்.
 

 

 

TAGS: