ராயிஸ்: சமமான ஊடக வாய்ப்புக்கள் மீதான அமைச்சரவை அறிக்கை தயார்

அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் கொள்கை அறிக்கைகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உதவும் பொருட்டு அரசியல் கட்சிகளுக்கு சமமான ஊடக வாய்ப்புக்களை வழங்குவது மீதான அமைச்சரவை அறிக்கை ஒன்றை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு தயாரித்துள்ளது.

அமைச்சுக்கு வேண்டுகோள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அதன் அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறினார்.

“என்றாலும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். தேர்தல் கொள்கை அறிக்கைகளை வெளியிடுவதற்கு நேர வரம்பு விதிக்கப்படுவதோடு அமைச்சில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்கவும் அது இருக்க வேண்டும்.”

“எல்லோருக்கும் இலவசம் என்ற அடிப்படையில் அது இருக்க முடியாது. ஒவ்வொரு அறிக்கையின் செய்தி முக்கியத்துவத்தைப் பொறுத்தும் அது இருக்க வேண்டும். தேர்தல் கொள்கை அறிக்கைகளைப் பொறுத்த வரையில் நாங்கள் பாரிசான் நேசனல் உட்பட எல்லாக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புக்களுக்கான  அடிப்படையை நாங்கள் தயாரித்துள்ளோம்.”

ராயிஸ் கோலாலம்பூரில் மலேசியப் பிரதமர்களின் சிந்தனைகள் என்னும் தலைப்பிலான கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த விஷயம் பற்றி குறிப்பாக கொள்கை அறிக்கைகளை வழங்கும் போது சில அம்சங்கள்

விரிவுபடுத்தப்பட வேண்டும் என விரும்பும் பல்வேறு கட்சிகளுடன் விவாதிப்பதற்கு அமைச்சு தயாராக இருக்கிறது என்றும் ராயிஸ் சொன்னார்.

“என்றாலும் நான் மீண்டும் சொல்கிறேன்… அமைச்சின் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். அதே வேளையில் ஒரளவு நாகரீகமும் பின்பற்றப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

“இது ஜனநாயகத்துக்காகவும் சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்ற நிலைக்காகவும் அமலாக்கப்படுகிறது.”

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரை செய்த 22 பரிந்துரைகளில் சுதந்திரமான நியாயமான ஊடக வாய்ப்புக்களும் அடங்கும்.

அந்தப் பரிந்துரைகள் எந்த நிபந்தனையுமின்றி ஏப்ரல் 3ம் தேதி மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

-பெர்னாமா