ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின், தாம் அறிந்தவரை முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் தலைவர் தாஜுடினின் ரிம598மில்லியன் கடன் விவகாரத்துக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வுகாணப்பட்டதில் தானாஹர்தா நேசனல் பெர்ஹாட்டுக்கு “இழப்பு எதுவும் ஏற்படவில்லை”என்கிறார்.
நீதிமன்றத்துக்கு வெளியில் காணப்பட்ட தீர்வு என்னவென்பது தெரிவிக்கப்படவில்லை.அதில் பட்ட கடனைவிட கூடுதலான தொகையை தாஜுடின் திருப்பிச் செலுத்தியிருக்கவும் கூடும் என்று அம்னோ இளைஞர் தலைவருமான கைரி கூறினார்.
“நீதிமன்றத்துக்கு வெளியில் காணப்பட்ட தீர்வு என்பதால் தீர்வு எப்படிப்பட்டது என்பது நமக்குத் தெரியாது.மாற்றரசுக் கட்சியினர் கூறுகிறார்கள் தாஜுடின் எதுவும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்று.ஆனால், அத்தீர்வின்படி கடனில் ஒரு பகுதியை செலுத்த வேண்டியிருக்கலாம் அல்லது கடன்பட்ட ரிம500மில்லியனைவிட கூடுதலான தொகையைக்கூட செலுத்த வேண்டியிருக்கலாம்.அதைப் பற்றி அவர்கள் குறிப்பிடுவதில்லை”.
நேற்று, தேசிய உயர்க்கல்விக் கடன் நிதி(பிடிபிடிஎன்)யும் மலேசியாவில் உயர்க்கல்வியின் எதிர்காலமும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுவிவாதத்தில் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை எதிர்த்து வாதமிட்ட கைரி, நடுவரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.
நடுவரும் யுஐஏ விரிவுரையாளருமான மஸ்லி மாலிக், கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மாணவர்களை விரட்டும் அரசாங்கம், தாஜுடின், தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) போன்றோருக்குக் கொடுக்கப்பட்ட பெரிய கடன்களைத் திரும்பப் பெறுவதில் அக்கறை கொள்ளாதது ஏன் என்று வினவியதற்கு கைரி அப்படிப் பதிலளித்தார்.
என்எப்சிக்குக் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவதிலும் அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகக் கூறிய அவர், அந்நிறுவனத்தின் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் நீதிமன்றத்தில் நம்பிக்கை மோசடி செய்தார் என்றும் நிறுவனச் சட்டத்தை மீறினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருப்பதே அதற்குச் சான்று என்றார்.
என்எப்சி விவகாரம் முதலில் வெளிவந்தபோது அந்நிறுவனத்தைத் தற்காத்துப் பேசியவர்களில் கைரியும் ஒருவர்.அதை நினைவுறுத்தும் வகையில் ரபிஸி, “கடனை என்எப்சி திருப்பிச் செலுத்துமா என்பதை நன்கு அறிந்தவர் கைரிதான்.ஏனென்றால் தொடக்கத்திலிருந்தே என்எப்சி-க்கு நெருக்கமாக இருப்பவர் ஆயிற்றே”, என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய ரபிஸி, “தாஜுடினின் வழக்குரைஞர்போல”ப் பதிலுரைக்கும் கைரி, “சிறிய மீன்களை விரட்டிப் பிடிப்பதும் உண்டுகொழுத்த சுறாமீன்களை விட்டுவிடுவதும்” ஏன் என்ற கேள்விக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றார்.
சுமார் 200பேர் கலந்துகொண்ட அந்த விவாதத்துக்கு மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் ஏற்பாடு செய்திருந்தது.