முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) மூசா ஹசான், தாம் ஐஜிபியாக இருந்தபோதே மாற்றரசுக் கட்சியினர் தம்மை அவர்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள் என்று கூறியுள்ளார்.
இதை உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்த மூசா, போலீஸ் படையினர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் தாம் அந்த அழைப்பை ஏற்கவில்லை என்றார்.
“இன்றும் அந்தக் கொள்கையுடன்தான் இருக்கிறேன்”, என்றவர் சொன்னதாக அந்நாளேடு கூறியுள்ளது.
முசா 2010, செப்டம்பர் 12-இல் பணிஓய்வு பெற்றார்.
பணி ஓய்வுக்காலத்தைக் குடும்பத்துடனும் பேரப் பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாகக் கழித்து வருவதாக மூசா தெரிவித்தார்.
“பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவதில் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகிறேன்.போலீசில் இருந்தபோது அதற்கு நேரம் இருந்ததில்லை”.
கடந்த வார இறுதியில், முன்னாள் புக்கிட் அமான் சிஐடி தலைவர் ஃபவுசி ஷாரி, பாஸ் கட்சியில் சேர்ந்தார் எனக் கூறப்பட்டது.ஃபவுசி, பேராக், தைப்பிங்கில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடம் தம் விண்ணப்பப் பாரத்தை வழங்கினாராம்.