‘அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்’

மலாக்காவில் சுல்தான்கள் ஆட்சி செய்த பொற்காலத்தில் வீரரான ஹங் துவா தமது நான்கு ‘ஹங்’ சகாக்களுக்கு தலைமை தாங்கி மலாய் மன்னராட்சியின் பெருமைக்குரிய சின்னமாகத் திகழ்ந்தார்.

ஆனால் இன்றைய நவீன மலாக்காவில் புதிய ‘ஹங் சம்சிங்’ உருவாகியுள்ளார் என பெர்சே கூட்டுத் தலைவரான ஏ சமாட் சைட் மன வருத்தத்துடன் கூறினார்.

தமது பெர்சே சகா-வான அம்பிகா ஸ்ரீனிவாசனைக் குறி வைத்து கடந்த சனிக்கிழமை மலாக்கா மெர்லிமாவில் நடைபெற்ற வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்ட போது சமாட் அவ்வாறு கூறினார்.

“அம்பிகா மெர்லிமாவிற்கு சென்று கொண்டிருந்த வேளையில்… அங்கு அவருக்காக 200 குண்டர்கள் காத்துக் கொண்டிருந்தனர். பெர்சே போராட்டம் பற்றி விளக்குவதற்காக பாஸ் கட்சி அம்பிகாவை அழைத்திருந்தது. அதுதான் ஜனநாயகம்.”

“ஆனால் அவர் அங்கு சென்றடைவதற்கு முன்பே அங்கிருந்த எங்கள் நண்பர்கள் அவரை அழைத்து அந்த ஹங் துவா மண்ணில் ஏற்கனவே குண்டர்கள் நிறைந்து விட்டதால் அங்கு வர வேண்டாம் என கூறினார்கள்.”

அந்த தேசிய இலக்கியவாதி நேற்று மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

“நினைத்துப் பாருங்கள். ஹங் துவா வாழ்ந்த அந்த மண்ணில் இப்போது ‘ஹங் சம்சிங்,” என பாக் சமாட் என்றும் அழைக்கப்படும் அவர் சொன்னார்.

மலாய்ப் பண்பாட்டில் ஹங் துவா போற்றப்படுகின்றார். அதே வேளையில் இந்த ‘ஹங் சம்சிங்’ “அவமானச் சின்னம்” என்றார் சமாட்.

“நான் மிகவும் வெட்கமடைந்தேன். நாம் சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முறை இது அல்ல. அவர்கள் சிறந்த வழியைத் தேர்வு செய்ய வேண்டும்.”

கடந்த சனிக்கிழமை அம்பிகாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்து நிகழ்வை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தினர். அந்த நிகழ்விலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களான கூ போய் தியோங், தே கோக் கியூ ஆகியோர் மீது முட்டைகளையும் கற்களையும் வீசினர்.

அந்தச் சம்பவத்தில் தே-யின் கார் உட்பட பல வாகனங்கள் சேதமடைந்தன. தே-யின் கார் கடுமையாக சேதமடைந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை பெர்க்காசாவும் அம்னோவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் அதனைத் தொடர்ந்த வன்முறைக்குத் தாங்கள் பொறுப்பு எனக் கூறப்படுவதை மறுத்தன.

குதத்தை ஆட்டுவது தான் நமது பண்பாடா ?”

அந்த மெர்லிமாவ் வன்முறைக்கு முன்னதாக அம்பிகா வீட்டுக்கு வெளியில் பல வினோதமான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சியும் அடங்கும். அந்தச் செய்தி உலக அளவில் பரவி விட்டது.

அது புதிய பண்பாடாக மாறி விட்டதாகத் தோன்றுகிறது என பாக் சமாட் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

“நாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்றோம். நமது பண்பாடும் பழக்க வழக்கங்களும் பின்னோக்கி செல்வதாகத் தோன்றுகிறது. மக்களுடைய வீட்டுக்கு முன்னால் சாயம் பூசுவதற்கு அவர்கள் குண்டர்களை கூலிக்கு அமர்த்தினர். அதுதான் நமது பண்பாடா ?” என சமாட் வினவினார்.

கடந்த  செவ்வாய்க்கிழமை அம்பிகா வீட்டுக்கு முன்னால் கூடிய குழு ஒன்றில் இருந்த முன்னாள் இராணுவ வீரர்கள் நாட்டின் தோற்றத்திற்கு அம்பிகா களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்றும் அவரை “நாட்டின் எதிரி” எனக் கூறிக் கொண்டும் தங்கள் பின்புறத்தை ஆட்டிக் காட்டி உடற்பயிற்சி செய்தார்கள்.

அதற்கு ஐந்து நாட்கள் முன்னதாக வணிகர்கள் குழு ஒன்று அம்பிகா வீட்டுக்கு வெளியில் கடையை அமைத்து மாட்டைறைச்சி பேர்கர் உட்பட இலவச பேர்கர்களை விநியோகம் செய்தது. அம்பிகா ஒர் இந்து. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்.

திங்கட்கிழமையன்று அம்பிகா வீட்டுக்கு முன்னாள் நாளை ‘மினி சந்தையை’ நடத்துவதற்கு ஆயத்தமாக சாலை நெடுகிலும் கடைகள் போடுவதற்கு குறியீடுகளை வணிகர் குழு ஒன்று போட்டது.

கோலாலம்பூரில் கடந்த மாதம் பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்டு வணிகர்கள் அம்பிகா வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.